உள்ளாட்சி தேர்தலுக்கு கூடுதல் வாக்குச்சாவடி அமைக்க வேண்டும்

அவிநாசி,மே25:  அவிநாசி ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கூடுதல் வாக்குச்சாவடிகளை அமைக்க கேட்டு அனைத்து அரசியல் கட்சியினரும் வலியுறுத்தினர். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்குச் சாவடிகள் அமைப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய ஆணையாளர் ஹரிஹரன் தலைமை தாங்கினார்.

அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலர்  (ஊராட்சிகள்) சாந்தி,  துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தவமணி (பொது), பனிமலர்(ஊராட்சிகள்),  பிரியா(தணிக்கை), மண்டலத் துணைவட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், பூங்கொடி, இளையராஜா, வாணிஸ்ரீ, ராமலிங்கம் மற்றும் 31 ஊராட்சி செயலாளர்கள்,   அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், திமுக ஒன்றிய பொறுப்பாளர்  பழனிசாமி: கடந்த சில தினங்களாக கட்சி நிர்வாகிகள் அனைவரும் வாக்குகள் எண்ணுகின்ற மையத்திற்கு சென்று விட்டதால் வாக்குச்சாவடி விவரம் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேச இயலவில்லை. இரண்டு நாட்களுக்குள் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து வாக்குச்சாவடி அமைப்பது குறித்து எழுத்து மூலமாக கருத்துக்கள் தெரிவிக்கிறோம்.

ஊராட்சி ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் சக்திவேல் கூறுகையில்:தண்டுக்காரம்பாளையம் ஊராட்சியில் ஏற்கனவே உள்ள வாக்குச்சாவடிகளில் போதிய அளவு இட வசதியும் மின்சார வசதியும் அடிப்படை வசதியும் இல்லை. ஒன்றிய ஆணையாளர்  ஹரிஹரன் கூறுகையில்: தண்டுக்காரம்பாளையத்தில் போதிய இடவசதி மற்றும் அடிப்படை வசதி கொண்ட அங்கன்வாடி மையகட்டிடத்தில்  மின்சார வசதியுடன் கூடிய வாக்குச்சாவடி அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஒன்றிய அதிமுக செயலாளர் சுப்பிரமணியம்: பழங்கரை ஊராட்சியில் வாக்குசாவடிகள் போதிய அளவு இல்லை. எனவே அங்கு கூடுதலாக வாக்குசாவடிகளை அமைக்க வேண்டும். கருவலூர் ஊராட்சி முன்னாள் தலைவர் அவிநாசியப்பன்: கருவலூர் ஊராட்சியில் 3வது  மற்றும் 6வது வார்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். எனவே அங்கு கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்க வேண்டும். புகார் மனு கொடுத்தவர்களுக்கு மட்டுமே கூட்டத்திற்கு அழைப்பு  தெரிவித்துள்ளனர்.

ஊராட்சி  ஒன்றிய ஆணையாளர் ஹரிஹரன்: கூட்டங்கள் நடைபெறும் முன்பே முன்கூட்டியே இனிமேல் அனைவருக்கும் தகவல் தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.  முன்பு 175 வாக்குச்சாவடிகள் இருந்ததை  சமீபத்தில் நடந்த தேர்தலில் 24 வாக்குச்சாவடிகள் கூடுதலாக்கி தற்போது 191 வாக்குச்சாவடிகளாக அமைத்து உள்ளோம். மேலும் அனைத்துக் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று தேவைக்கு ஏற்ப கூடுதல் வாக்குச்சாவடிகளை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கூட்டத்தில் துப்புரவுஆய்வாளர் கருப்புசாமி, மேற்பார்வையாளர் பாலு மற்றும் அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர்.

Related Stories: