சத்துணவு சாப்பிடாத மாணவ, மாணவிகளுக்கும் இலவச சீருடை

உடுமலை,மே25:  அரசு பள்ளிகளில் சத்துணவு சாப்பிடாத மாணவ,மாணவிகளுக்கும் இலவச சீருடை வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் அனைத்தும் வரும் 3ம் தேதி திறக்கப்பட உள்ளது.

இந்நிலையில் இந்த கல்வி ஆண்டு முதல் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு சீருடை மாற்றம் அமல்படுத்தப்பட உள்ளது. இதன்படி முதல் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஒரு சீருடையும், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ஒரு சீருடையும், 9 மற்றும் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஒரு சீருடையும் 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவ,மாணவிகளுக்கென தனி சீருடையும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு இணையாக வண்ண மயமான சீருடைகள் அரசு பள்ளிகளில் அமல்படுத்தப்பட உள்ள நிலையில், பள்ளிகள் திறக்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் புதிய நிற சீருடைகளுக்கான துணிகளை பெற்று அவற்றை தைப்பது என்பது நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களுக்கு மிகவும் சிரமமான காரியமாக உள்ளது.

குறிப்பாக ஒன்று முதல் 5 வரை பயிலும் மாணவர்களுக்கான சீருடைகள் வழக்கம் போல கால்சட்டை மற்றும்  சட்டை என்றும், மாணவிகளுக்கு ஸ்கட் மற்றும் சட்டை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முழுக்கால் சட்டை(பேண்ட்) மற்றும் சட்டை அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதே போல மாணவிகளுக்கு சுடிதாருடன் கான்வென்ட் குழந்தைகளை போல கோட் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பள்ளி திறக்க 10 நாட்களே உள்ள நிலையில் புதிய நிற சீருடைகளை வாங்கி அவற்றை தைப்பது சிரமமான காரியம் எனக் கூறும் பெற்றோர்கள், ஏழ்மையான குழந்தைகளே அரசு பள்ளிகளில் பயின்று வருகின்றனர். ஆண்டுதோறும் புதிய நிறத்திலான சீருடைகள் மாற்றப்படும் பட்சத்தில் அவற்றிற்கான தையல் கூலியும் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக மாணவிகளுக்கான சுடிதார் தைக்க கடந்த ஆண்டு வரை ரூ.350 முதல் ரூ.500 வரை கூலி பெற்ற டெய்லர்கள் தற்போது சுடிதாருக்கு மேல் அணியக் கூடிய கோட் தைக்க வேண்டியிருப்பதால் ஒரு செட் சீருடைக்கு ரூ.700 வரை வசூலிக்கின்றனர். மேலும் மாணவர்களுக்கான பேண்ட்,சர்ட் தைப்பதற்கும் ரூ.700 வரை வசூலிக்கப்படுகிறது.

மாணவ,மாணவிகளுக்கு 2 செட் சீருடை  வாங்குவதற்கு குறைந்த பட்சம் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை கூடுதல் செலவாகிறது. எனவே இலவச நோட்டுப்புத்தகம்,இலவச சைக்கிள் போல சத்துணவு சாப்பிடாத மாணவ,மாணவிகளுக்கும் அரசு பள்ளிகளில் இலவச சீருடை வழங்க கல்வி அமைச்சரும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு பள்ளி மாணவ,மாணவிகளின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: