×

25 சதவீத இடஒதுக்கீடு தனியார் பள்ளிகளில் சேர 7 ஆயிரம் பேர் விண்ணப்பம்

மதுரை, மே 25: கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதற்காக மதுரை மாவட்டத்தில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில், தொடக்க வகுப்புகளில் 25 சதவீத மாணவர் சேர்க்கையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். மதுரை மாவட்டத்தில் 2019-20ம் கல்வியாண்டுக்கான கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு கடந்த ஏப்ரல் 22ம் தேதி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பம் பெறும் பணி துவங்கியது. மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மேலும் விண்ணப்பங்கள் இணையதளம் மூலமும் பெறப்பட்டன.

இந்நிலையில் மே 18ம் தேதி மாலை வரை பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மதுரை மாவட்டத்தில் உள்ள 447 தனியார் பள்ளிகளில் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீடாக 5 ஆயிரத்து 867 இடங்கள் உள்ளன. கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் தொடக்க வகுப்புகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதுவும், மாணவரின் வீடு அமைந்துள்ள பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் உள்ள பள்ளிக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

இதனை தவிர்த்து, வேறு பகுதிகளில் உள்ள பள்ளிக்கு விண்ணப்பித்திருந்தால் அது தள்ளுபடி செய்யப்படும். விண்ணப்பங்கள் அனைத்தும், இணையதளம் மூலம் பள்ளி கல்வித்துறைக்கு சென்றடைந்து விட்டது. மதுரை மாவட்டத்தில் மட்டும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்திருப்பதாக தெரிகிறது.

பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கும் அதிகமாக விண்ணப்பம் வந்திருந்தால், பெற்றோர் முன்னிலையில் குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags : schools ,
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...