×

மதுரை வாக்கு எண்ணிக்கையில் முகவர்கள் செயல்பாடால் தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சி

மதுரை, மே 25: வாக்கு எண்ணிக்கையில் அரசியல் கட்சி வேட்பாளர்களின் முகவர்கள் செயல்பாடுகளை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
மதுரை மக்களவைத் தொகுதி, திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்கு எண்ணிக்கை மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் நடந்தது. வாக்கு எண்ணிக்கையில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் எப்படி விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும் என திமுக, அதிமுக உள்ளிட் கட்சிகள் அறிவுறுத்தியிருந்தன. இதில் திமுக தனது கட்சி வேட்பாளர்களின் முகவர்களுக்காக 9 பக்கம் கொண்ட வழிகாட்டுதல் நூலை வெளியிட்டது.

அதில் வாக்குசாவடிக்கு செல்லும் திமுக முகவர்கள் என்ன படிவம், பொருட்கள் எடுத்து செல்ல வேண்டும். வாக்கு பெட்டி உள்ள அறையை திறக்கும்போது, பூட்டின் சீல் உடைக்கப்பட்டதா என்பதை கண்காணிக்க வேண்டும். வாக்கு இயந்திரத்தில் உள்ள 3 சீல்கள் முறையாக உள்ளதா, உடைந்துள்ளதா, வாக்குப்பதிவு அன்று வாக்கு சாவடியில் பயன்படுத்தப்பட்ட வாக்கு இயந்திரத்தின் எண்ணும், அதே இயந்திரம்தான் எண்ணப்படுகிறதா என கண்காணித்து, அதை உறுதி செய்தபின் வாக்கு எண்ணிக்கை நடத்த அனுமதிக்க வேண்டும். அதே போன்று, தபால் ஓட்டுகள் எண்ணும்போது, 13ஏ, 13பி, 13சி படிவம் குறித்து தெளிவான விபரம் கொடுக்கப்பட்டது.

அதனை முழுமையாக படித்திருந்த திமுக முகவர்கள் வாக்கு பதிவின்போது, முழுமையாக கண்காணித்தனர். இதனால், ஒவ்வொரு தபால் ஒட்டுகளையும் பிரித்து படிவத்தில் உள்ள கையெழுத்து, ஓட்டு போட்டது போன்ற விபரத்தை சரியாக பார்த்த பின்பு அதை அனுமதித்தனர். இதனால் தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து மூத்த தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘நான் பல தேர்தலை நடத்தியுள்ளேன். ஆனால் இந்த முறை வேட்பாளர்களின் முகவர்கள் சற்று வித்தியாசமாக இருந்தனர். முன்பு, தபால் ஓட்டுகளை பிரித்து அதில் ஓட்டு எந்த சின்னத்தில் விழுந்துள்ளது. அதை மட்டுமே முகவர்கள் பார்த்து, அதில் குறைபாடு உள்ளதா என பார்ப்பார்கள். ஆனால் இந்த முறை, தபால் ஓட்டுக்கான படிவத்தில் உள்ள கையெழுத்து சரியாக உள்ளதா, முறையான பதிவா என முகவர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டு அதை ஏற்றுக்கொண்ட பிறகு தபால் ஓட்டுகளை அனுமதித்தனர்.

இதில் ஓரு தபால் ஓட்டில் கையெழுத்து மாறியதை கண்டுபிடித்தனர். இதனால் தபால் ஓட்டுகள் எண்ணுவதில் சற்று காலதாமதம் ஏற்பட்டது.
மின்னணு வாக்கு இயந்திரத்திலும், முகவர்கள் முழு ஈடுபாட்டுடன் இருந்தனர். இதனால் ஒருவருக்கு விழுந்த ஓட்டை மற்ற வேட்பாளருக்கு மாற்றி தவறாக பதிவு செய்ய முடியாது. அந்த அளவுக்கு கண்ணும் கருத்துமாக முகவர்கள ்செயல்பட்டது தேர்தல் அதிகாரிகளான எங்களுக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியாக இருந்தது. அதே நேரத்தில் விழிப்புணர்வுடன் முகவர்கள் இருக்கிறார்கள் என்பதை காட்டியது’ என்றார்.

Tags : Election officials ,agents ,Madurai ,
× RELATED பத்தனம்திட்டா தொகுதியில் மாமியாரின்...