×

மதுரை நகரில் வழிப்பறி, திருட்டு, கொள்ளை 135 நாட்களில் 2651 பவுன் நகைகள் இழப்பு பொதுமக்கள் பீதி

மதுரை, மே 25: மதுரை நகரில் வழிப்பறி, திருட்டு கொள்ளை என கடந்த 135 நாட்களில் 2651 பவுன் நகைகளை மக்கள் இழந்துள்ளனர். இந்த சம்பவத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வழிப்பறி, திருட்டு, கொள்ளை சம்பவங்கள் வருடம் தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த வருடத்தில் நகரில் மட்டுமே 87 வழிப்பறி, 234 வீட்டை உடைத்து கொள்ளையடித்த சம்பவங்கள் அரங்கேறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆனால் இந்த வருடத்தில் ஜனவரி மாதம் கரிமேடு பகுதியில் தேவி  என்பவர் வீட்டை உடைத்து 10 பவுன் நகைகள் கொள்ளை, காமராஜர்புரம் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவரது வீட்டிற்குள் புகுந்து 418 பவுன் நகைகள், ரூ.8 லட்சம் கொள்ளை என தொடர்ந்த 10 சம்பவங்களில் 525 பவுன் நகைகள் கொள்ளை போயிருக்கிறது.  

கடந்த பிப்ரவரி மாதத்தில் அதிகபட்சமாக 14 சம்பவங்களில் அடகுக்கடை கொள்ளை சம்பவம் உட்பட 1827 பவுன் நகைகள், ரூ.12.65 லட்சம் பணம்,  மார்ச் மாதத்தில் 10 சம்பவங்களில் 123 பவுன் நகைகள், ஏப். மாதத்தில் 11 சம்பவங்களில் 112 பவுன் நகைகள், ரூ.14 லட்சம் பணம்,  மே 15ம் தேதி வரை 8 சம்பவங்களில் 64 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. இந்த வருடத்தில் 135 நாட்களில் 53 சம்பவங்களில் 2651 பவுன் நகைகள், ரூ.34.65 லட்சத்தை மக்கள் இழந்துள்ளனர். தொடரும் வழிப்பறி, திருட்டு, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.  

மதுரை மேலமாசி வீதி சமூக ஆர்வலர் கணேசன் கூறும்போது, ‘‘சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை போலீஸ் படையில்தான் அதிகம்பேர் பணியாற்றி வருகின்றனர். நகரில் உள்ள 23 காவல் நிலையங்களில் கமிஷனர் தலைமையில் 4 துணை கமிஷனர்கள், 14 உதவி கமிஷனர்கள் 50க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள், 100க்கும் மேற்பட்ட எஸ்ஐகள் மற்றும் 2 ஆயிரத்திற்கும் அதிக போலீசார் பலத்துடன் செயல்பட்டு வருகின்றனர். ஆனால், இந்த காவல்துறையின் கீழ் உள்ள மக்கள் 135 நாட்களில் 2651 பவுன் நகைகளை  இழந்து இருப்பது மிகப்பெரிய வேதனையாகும்.

போலீசார் செல்போன் திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் சிக்கிய நபர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். ஆனால் பெரிய அளவில் தெப்பகுளம், தல்லாகுளம், அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் பட்டப்பகலில் வழிப்பறி சம்பவங்களை செய்து விட்டு ஜாலியாக நகரில் வலம் வருபவர்களை கைது செய்வதில் வேகம் காட்டவில்லை. குறிப்பிடதக்க அளவில் நகை பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்து, நகையை மீட்டது போல் இதுவரை இல்லை. இனி வரும் காலங்களில் போலீசார் ரோந்து பணியை வேகப்படுத்தி குற்றங்களை தடுக்க போலீஸ் கமிஷனர் வேகம் காட்ட வேண்டும்’’ என்றார்.

Tags : robbery ,city ,Madurai ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து...