×

தென்காசி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றிக்கு கைகொடுத்த வாசுதேவநல்லூர்

தென்காசி, மே 25:  தென்காசி மக்களவை தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதியில் வாசுதேவநல்லூர் தொகுதியில் திமுக அதிகபட்சமாக 23 ஆயிரம் வாக்குகளை கூடுதலாக பெற்றுள்ளது. தென்காசி மக்களவை தொகுதியில் தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், வில்லிபுத்தூர் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், வில்லிபுத்தூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளும் தனித்தொகுதிகள் ஆகும். இதில் வாக்குகள் அடிப்படையில் திமுக வேட்பாளர் தனுஷ்குமார், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி  இருவருக்குமே தென்காசி தொகுதியில் தான் அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. அதாவது தனுஷ்குமார் ஆறு தொகுதிகளில் பெற்ற வாக்குகளில் குறைந்த பட்சமாக ராஜபாளையத்தில் 67 ஆயிரத்து 408 வாக்குகளும், அதிகபட்சமாக தென்காசியில் 90 ஆயிரத்து 378 வாக்குகளும் பெற்றுள்ளார். அதே போன்று டாக்டர் கிருஷ்ணசாமி குறைந்தபட்சமாக வாசுதேவநல்லூரில் 50 ஆயிரத்து 873 வாக்குகள் பெற்றுள்ளார். அதிகபட்சமாக தென்காசியில் 69 ஆயிரத்து 999 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் தனுஷ்குமார் மற்றும் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகிய இருவரும் தென்காசி தொகுதியில் தான் அதிகபட்ச வாக்குகளை பெற்றுள்ளனர்.

 வித்தியாசத்தை பொறுத்தவரை வாசுதேவநல்லூரில் அதிகபட்சமாக 23 ஆயிரத்து 797 வாக்குகளை தனுஷ்குமார் அதிகம் பெற்றுள்ளார். இதற்கு அடுத்தபடியாக கடையநல்லூரில் 22 ஆயிரத்து 978 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். வில்லிபுத்தூரில் 20 ஆயிரத்து 578 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். நான்காவதாக தென்காசியில் 20 ஆயிரத்து 379 அதிகம் பெற்றுள்ளார். சங்கரன்கோவிலில் 18 ஆயிரத்து 205 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். குறைந்த பட்சமாக ராஜபாளையத்தில் 10 ஆயிரத்து 193 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். தபால் ஓட்டுகளை பொறுத்தவரை மொத்தம் 10 ஆயிரத்து 413 வாக்குகள் பதிவாகியிருந்தது. இதில் 920 வாக்குகள் செல்லாத வாக்குகள் ஆகும். மீதமுள்ள 9493 வாக்குகளில் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு ஆயிரத்து 654 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. தனுஷ்குமார் 5 ஆயிரத்து 810 வாக்குகள் பெற்றுள்ளார். இது கிட்டத்தட்ட மூன்றரை மடங்கு அதிக வாக்குகளை பெற்றுள்ளார். அமமுக 986 வாக்குகளையும், நாம் தமிழர் 590 வாக்குகளையும், மக்கள் நீதி மய்யம் 179 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

Tags : Vasudevanallur ,candidate ,DMK ,constituency ,Tenkasi Lok Sabha ,
× RELATED மோடியிடமிருந்து இந்தியாவை...