ஓட்டு எண்ணிக்கை முடிந்ததால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொகுதிக்கு திரும்பியது

நெல்லை, மே 25: நெல்லை மாவட்டத்தில் நெல்லை, தென்காசி ஆகிய இரண்டு மக்களவை தொகுதிகள் உள்ளன. இதில் நெல்லை மக்களவை தொகுதியில் நெல்லை, பாளையங்கோட்டை, ராதாபுரம், நாங்குநேரி, அம்பாசமுத்திரம், ஆலங்குளம் ஆகிய சட்டசபை தொகுதிகளும், தென்காசி மக்களவை தொகுதியில் தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம், வில்லிபுத்தூர் ஆகிய சட்டசபை தொகுதிகளும் அடங்கும்.

நெல்லை மக்களவை தொகுதிகளுக்கு 1783 வாக்குச்சாவடிகளிலும், தென்காசி மக்களவை தொகுதிக்கு 1738 வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் நடந்தது. நெல்லை மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை கலெக்டர் ஷில்பா தலைமையில் நெல்லை அரசு பொறியியல் கல்லூரியிலும், தென்காசி மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை தேர்தல் அலுவலர் முத்துராமலிங்கம் தலைமையில் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியிலும் நடந்தது. நெல்லை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் ஞானதிரவியம், தென்காசி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் தனுஷ்குமார் ஆகியோர் ெவற்றி பெற்றனர். இதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர்கள் வழங்கினர். இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீலிடப்பட்டு பாதுகாப்பான அறைகளில் வைக்கப்பட்டன. இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று லாரிகளில் ஏற்றி அந்தந்த சட்டசபை தொகுதி தலைமையிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம், வில்லிபுத்தூர் சட்டசபை தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மட்டும் அந்த மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. எஞ்சிய நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 10 சட்டசபை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களும் அந்தந்த சட்டசபை தொகுதி தலைமையகங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு உதவி தேர்தல் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த இயந்திரங்கள் அனைத்தும் 45 நாட்கள் பாதுகாப்பாக வைக்கப்படும். தேர்தலை எதிர்த்து யாராவது நீதிமன்றத்தில் 45 நாட்களுக்குள் வழக்கு தொடுத்தால் அந்த தொகுதியின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மட்டும் பாதுகாக்கப்படும். வழக்கு எதுவும் இல்லையெனில் அந்த இயந்திரங்கள் அடுத்தடுத்த தேர்தல்களில் பயன்படுத்த தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வேறு மாநிலங்கள், மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: