மழை பெய்ய வேண்டி வாசுதேவநல்லூர் சிந்தாமணிநாதர் கோயிலில் சிறப்பு பூஜை நிறைவு

சிவகிரி, மே 25: மழை வேண்டி வாசுதேவநல்லூரில் உள்ள சிந்தாமணிநாதர் சுவாமி கோயிலில் 21 நாள்கள் நடந்த தொடர் சிறப்பு வழிபாட்டின் நிறைவுநாள் பூஜை நேற்று நடந்தது. வாசுதேவநல்லூரில் உள்ள சிந்தாமணி நாதர் சுவாமி கோயில் சுமார் 800 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தது. இக்கோயிலில் மூலவர் சிவன், நின்ற வடிவில் ஒருபாதி சிவனாகவும் மறுபாதி உமையாளாகவும் உமையொருபாகனாக (அர்த்தநாரீஸ்வரர்) காட்சியளித்து அருள் பாலிக்கிறார். பெண்ணும் ஆணும் சரி நிகர் சமம் என்னும் தத்துவத்தை உணர்த்தும் வகையில் சிவன் இவ்வாறாக காட்சியளிக்கிறார். தமிழகத்தில் இங்கும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டிலும் மட்டுமே அர்த்தநாரிஸ்வரர் கோயில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்து சமய அறநிலையத்துறையின் பராமரிப்பில் உள்ள இக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் வழிகாட்டுதலின்படி பருவமழை பொழியவேண்டி 21 நாள் தொடர் சிறப்பு புஜை நடந்தது. நந்தியம் பெருமாளுக்கு நீர்த்தேக்கத் தொட்டி கட்டி நந்தீஸ்வரர் கழுத்துவரை நீர் நிரப்பி சிறப்பு பூஜைகள் நடந்தன.

கடந்த 4ம் தேதி தொடங்கிய பூஜை காலை 9 மணி முதல் 10 மணி வரை தொடர்ந்து 20 நாட்களாக மழை பதிகம் பாடப்பட்டு நடந்து வந்தது. கோயில் செயல் அலுவலர் சதீஷ் தலைமையில் நடந்த வழிபாட்டின் 21வது நாள் நிறைவு பூஜை நேற்று நடந்தது. கோயில் அர்ச்சகர் கமலேஸ்வரர் பட்டர் தலைமையிலான பட்டர்கள் வேதபாராயண ஐதீக முறைப்படி நந்தியம்பெருமாளுக்கு வெட்டிவேர் மாலையணிவித்து சிறப்பு பூஜைகள் நடந்த்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: