விழுப்புரத்தில் சாலையோரத்தை ஆக்கிரமித்து மீண்டும் நடைபாதை கடைகள்

விழுப்புரம், மே 25: விழுப்புரம் காந்திசிலை அருகே சாலை விரிவாக்க பணிகள் முடிந்த பகுதியில் மீண்டும் நடைபாதை கடைகளை வைத்துக்கொண்டு ஆக்கிரமிப்பு செய்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே துவக்கத்திலேயே காவல்துறை இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.  விழுப்புரம் நகரில் போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்னையாக உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்கள் ஒருபுறம் இருப்பினும், சாலையோர நடைபாதை கடைகள், சாலையோரத்தில் தாறுமாறாக இருசக்கர வாகனங்களை நிறுத்துவதால் கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக நான்கு முனை சந்திப்பு முதல் நேருஜி சாலையில் ரயில்வே மேம்பாலம் வரை கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. தற்போது

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக சாலையின் இருபுறமும் விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. 60 சதவீத பணிகள் முடிந்துள்ளது.

இதனிடையே சாலை விரிவாக்கம் செய்த பகுதியில் சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களில் தார்பாய் போட்டு தற்போது கடைகள் அமைக்க இடம் பிடித்து வருகின்றனர். மேலும் சிலர் கடைகளை போட்டு வியாபாரம் நடத்தி வருகின்றனர்.

காந்திசிலை அருகே சிமெண்ட் சாலை போடப்பட்ட இடங்களில் முழுவதும் தார்பாய் அமைத்து பத்துக்கும் மேற்பட்ட கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், வாகன பயன்பாட்டிற்காகவும் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்த இடங்களில் கடைகளை வைத்து ஆக்கிரமித்து கொள்வதால் நெரிசல் குறைவது சாத்தியமில்லை.  எனவே, விழுப்புரம் காவல் துறையினர் துவக்கத்திலேயே நடைபாதை கடைகளை முற்றிலும் அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: