ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் மருத்துவரை நியமிக்க நடவடிக்கை

சின்னசேலம், மே 25: நைனார்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் மருத்துவர், செவிலியர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது நைனார்பாளையம் ஊராட்சி. இங்கு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த மருத்துவமனையில் இந்த ஊராட்சியை சுற்றி கீழ்குப்பம், அனுமனந்தல், வீ.கிருஷ்ணாபுரம், வீ.மாமந்தூர், கருந்தலாக்குறிச்சி, வீ.அலம்பளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒரு நாளைக்கு சுமார் 150லிருந்து 200 நோயாளிகள் வரை வந்து செல்கின்றனர். ஆனால் அதற்கேற்ற வகையில் அவர்களுக்கு தரமான, முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் தற்போது போதிய மருத்துவர்கள் இல்லையென கூறப்படுகிறது.தற்போது ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே உள்ளார். இவரால் தினமும் அதிகளவில் வரும் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்க முடியவில்லை. அதேபோல செவிலியர்கள் போதிய அளவில் இல்லை. இங்கு மருத்துவம் பார்க்க வரும் மக்களுக்கு தேவையான மாத்திரைகள் இருப்பு வைத்திருப்பதில்லை. சாதாரண காய்ச்சல் மாத்திரைகள் கூட இங்கு இருப்பு இல்லை, வெளியில் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றனர்.

தேவையான மருந்து மாத்திரைகளை எப்போதும் இருப்பு உள்ளபடி வாங்கி வைத்துக்கொள்ள பொறுப்புள்ள அதிகாரிகள் இல்லை. கடந்த ஒரு வாரத்திற்கு முன் காய்ச்சல் என வந்த சிறுவனுக்கு மாத்திரை கூட கொடுக்க முடியாமல் திருப்பி அனுப்பியுள்ளனர்.  மேலும் நைனார்பாளையத்தை சுற்றி உள்ள கிராம பெண்கள் இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்குத்தான் பிரசவம் பார்க்க வந்து செல்கின்றனர்.  அதனால் பிரசவத்திற்கு வரும் பெண்கள் பயன்பெறும் வகையில் இரவு, பகல் எந்நேரமும் இருக்கும் வகையில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியரை நியமிக்க வேண்டும். மேலும் 30 படுக்கை அறை வசதியுடன் கூடிய கட்டிடத்தை கட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: