பராமரிப்பின்றி வீணாகி வரும் ஹாக்கி மைதானம்

புதுச்சேரி, மே 25:   புதுச்சேரி உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் ரூ.3 கோடி செலவில்  புல்தரை அமைக்கப்பட்ட செயற்கை இழை ஹாக்கி மைதானம் பராமரிப்பின்றி வீணாகியுள்ளது. இதனால் வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும்போது பல்வேறு சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி. ஒலிம்பிக்கில் 8 முறை தங்கம் வென்ற பெருமை ஹாக்கிக்கு உண்டு. கிரிக்கெட் மோகத்தால் இன்று ஹாக்கி விளையாட்டு சரிவு பாதையை நோக்கி பயணித்து வருகிறது. இந்நிலையில் ஹாக்கி விளையாட்டை ஊக்குவிக்கவும், பிரபலப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற சூழலில் புதுச்சேரியில் உள்ள ஒரே ஒரு ஹாக்கி மைதானம் எவ்வித பராமரிப்புமின்றி வீணாகி வருகிறது. உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் அனைத்து விளையாட்டுகளுக்கும் தனித்தனியாக மைதான வசதி உள்ளது. குறிப்பாக, 2004-05ம் ஆண்டு ஹாக்கி விளையாட்டுக்காக ரூ.3 கோடி செலவில் செயற்கை இழை புல்தரை (ஆஸ்ட்ரோ டர்ப்) மைதானம் ஏற்படுத்தப்பட்டது.

 இதன் மூலம் ஹாக்கி வீரர்கள் சிறந்த முறையில் பயிற்சி பெற்று வந்தனர். இந்த மைதானத்தில் அமைக்கப்பட்ட செயற்கை இழை புல்தரை பராமரிப்பின்றியும், தண்ணீர் பாய்ச்சும் கருவிகள் பழுதடைந்தும் காணப்படுகிறது. தற்போது செயற்கை இழை புல்தரையில் பல இடங்கள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வீரர், வீராங்கனைகள் மைதானத்தில் சரியாக ஆட முடியாமல் தடுமாறி வருகின்றனர். வீரர்கள் வேகமாக ஓடும்போது அடிக்கடி கீழே விழுந்து அடிபடுவது தொடர்கதையாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து வீரர்கள் கூறுகையில், புதுவையில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்ட ஹாக்கி மைதானம் சரிவர பராமரிக்கப்படவில்லை. இதனால் விளையாட தகுதியற்ற நிலையில் மைதானம் காணப்படுகிறது. விளையாட்டுத்துறை அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி மைதானத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதுதொடர்பாக விளையாட்டுத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, `மற்ற மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை இழை புல்தரை மைதானத்தில் மாநில, தேசிய அளவிலான போட்டிகள் நடத்த மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், புதுவையில் வேறு எங்கும் ஹாக்கி விளையாட மைதானம் கிடையாது. இதனால் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்ட மைதானத்தில் அனைத்து வகையான போட்டிகள் நடத்தவும், வீரர்கள் பயிற்சி பெறவும் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் ஹாக்கி மைதானம் வீணாகி விட்டது.

  சேதமடைந்த செயற்கை புல்தரையை அகற்றிவிட்டு, புதிதாக செயற்கை புல்தரை அமைக்க ரூ.5 கோடிக்கு மேல் செலவாகும். புதுவையில் நிதி நெருக்கடி நிலவி வரும் சூழலில் மைதானத்தை சீரமைக்க அரசு நிதி ஒதுக்க வாய்ப்பில்லை. மேலும், விளையாட்டுக்கென்று தனித்துறை ஏற்படுத்தப்படவில்லை. பள்ளி கல்வித்துறையின் ஒரு பிரிவாகவே விளையாட்டுத்துறை இயங்கி வருகிறது. கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியானது, அத்துறைக்கே போதவில்லை. இந்த நிலையில் விளையாட்டுத்துறைக்கு சொற்ப அளவே நிதி ஒதுக்கப்படுகிறது. அதை வைத்து விளையாட்டு மைதானங்களை கூட பராமரிக்க முடியவில்லை. விளையாட்டுக்கு தனித்துறை ஏற்படுத்தினால் மட்டுமே அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணமுடியும். அதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: