×

புதுவையில் ரப்பர் வேகத்தடை வாகன ஓட்டிகள் அவதி

புதுச்சேரி, மே 25: புதுவையில் புதிதாக முளைத்துள்ள ரப்பர் வேகத்தடைகளால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர். புதுவை பிராந்தியம் குறைந்த பரப்பளவை கொண்டது. இங்கு போக்குவரத்து நெரிசல் வருடந்தோறும் அதிகரித்து வருகிறது. விபத்துகள் அதிகரிக்கவே, ஆங்காங்கே வேகத்தடைகள் அமைக்கப்படுகின்றன. இது ஒருபுறம் மக்களுக்கு நன்மை அளித்தாலும், மற்றொரு வகையில் பாதிப்பையும் ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக முருங்கப்பாக்கத்தில் இருந்து வில்லியனூர் செல்லும் சாலையில் 6 கிமீ தூரத்தில் 30க்கும் மேற்பட்ட வேகத்தடைகள் உள்ளன. இதன் காரணமாக அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். இந்த நிலையில் புதுச்சேரி நகர பகுதியில் வாகனங்கள் வேகமாக செல்வதை தடுக்கும் வகையில் 45 அடி ரோடு, செஞ்சி சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் ரப்பர் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ரப்பரால் தயாரிக்கப்பட்ட உருளை வடிவிலான இந்த வேகத்தடைகள் சாலையில் இருப்பதே தெரியவில்லை.

வேகமாக சென்று வாகனங்கள் அதன் மீது ஏறி இறங்கும்போது வண்டியை ஓட்டிச் செல்பவர்களுக்கு முதுகுவலி ஏற்படுகிறது. மேலும் சில பகுதிகளில் வாகனங்கள் பழுதாகி விபத்துகளும் நடந்துள்ளன. இந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்லும்போது ரப்பர் வேகத்தடை சேதமடையும் அவலமும் உள்ளது. எனவே ஒளிரும் வகையிலான ரப்பர் வேகத்தடைகளை அமைக்க வேண்டும். ரோட்டில் வேகத்தடைகள் இருப்பதை முன்கூட்டியே வாகன ஓட்டிகள் அறியும் வகையில் வெள்ளை கோடுகள் அடிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர். இல்லாவிட்டால் மக்களுக்கு தொல்லை கொடுக்கும் இதுபோன்ற ரப்பர் வேகத்தடைகளை நீக்கிவிட்டு, சிமெண்ட் அல்லது தார் கலவையிலான வேகத்தடைகள் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...