அமைச்சர் ஷாஜகானுக்கு திடீர் மாரடைப்பு அரசு மருத்துவமனையில் அனுமதி

புதுச்சேரி, மே 25: புதுச்சேரி வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகானுக்கு நேற்று இரவு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதை தொடர்ந்து அரசு பொது மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் 3 முறை முதல்வராகவும், கேரளா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களின் ஆளுநராகவும் பொறுப்பு வகித்தவர் பரூக் மரைக்காயர். இவரது மகன் ஷாஜகான். காங்கிரஸ் கட்சியில் இருந்து வரும் இவர் பலமுறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராக இருந்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காலாப்பட்டு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து வருவாய்த்துறை அமைச்சராக பொறுப்பேற்று, செயல்பட்டு வருகிறார். இவர் கூடுதலாக போக்குவரத்து துறை, தொழில்துறை உள்ளிட்ட துறைகளையும் கவனித்து வருகிறார்.

Advertising
Advertising

இதனிடையே சமீபத்தில் நடந்து முடிந்த புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வைத்திலிங்கத்திற்கு ஆதரவாக அமைச்சர் ஷாஜகான் பல்வேறு பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் புதுச்சேரி நகர பகுதியில் உள்ள வீட்டில் அமைச்சர் ஷாஜகான் இருந்தபோது, திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே அவரது உறவினர்கள் புதுவை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தினர். அதன்பேரில் அங்குள்ள கார்டியாலஜி பிரிவில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் ஷாஜகானுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 தகவல் அறிந்த அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அமைச்சர் ஷாஜகானை சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். அமைச்சர் ஷாஜகான் மாரடைப்பால் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: