மக்கள் நம்பிக்கையே வெற்றிக்கு காரணம்

புதுச்சேரி, மே 25: ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் மீது மக்கள் வைத்த நம்பிக்கை தான் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் என மக்களவை தேர்தலில் வெற்றிபெற்ற வைத்திலிங்கம் கூறினார். புதுச்சேரி மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் 1.97 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து நேற்று காலை வழுதாவூர் சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி அருணிடம் இருந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றார். அப்போது அவருக்கு முதல்வர் நாராயணசாமி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத், மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம், அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், துணை சபாநாயகர் வி.பி.சிவக்கொழுந்து, எம்எல்ஏக்கள் லட்சுமி நாராயணன், அனந்தராமன், தீப்பாய்ந்தான், விஜயவேணி, இந்திய கம்யூ., செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், மார்க்சிஸ்ட் கம்யூ. பிரதேச செயலாளர் ராஜாங்கம், முருகன், விடுதலை சிறுத்தைகள் தேவ.பொழிலன் மற்றும் கூட்டணி கட்சியினர் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertising
Advertising

அங்கிருந்து திறந்த ஜீப்பில் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் ஊர்வலமாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தனர். ராஜீவ்காந்தி சிலை, காமராஜர் சிலை, இந்திராகாந்தி சிலை உள்ளிட்ட தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்தனர். அப்போது தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக வெற்றியை கொண்டாடினர். வைசியாள் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் வெற்றி ஊர்வலம் நிறைவடைந்தது. அங்கு காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் மாலை அணிவித்தும் சால்வை அணிவித்தும் வைத்திலிங்கத்துக்கு வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக, கலெக்டர் அலுவலகத்தில் வைத்திலிங்கம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது மக்கள் வைத்த நம்பிக்கை தான் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம். தென்மாநிலங்களில் பாஜகவால் வேரூன்ற முடியவில்லை. இருந்தாலும், தென்மாநிலங்களை பாஜக அரசால் ஒதுக்கிவிட முடியாது. புதுச்சேரிக்கு தேவையான அனைத்தையும் மத்திய அரசிடமிருந்து பெற்று தருவேன். வாக்களித்த மக்களுக்கும், வெற்றிக்கும் பாடுபட்ட காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: