×

கடலூர் மாவட்டத்தில் கருகும் குறுவை பயிரை காப்பாற்ற ஜிப்சம் உரத்தை வழங்க விவசாயிகள் கோரிக்கை

கடலூர், மே 25: கடலூர் மாவட்டத்தில் கருகும் குறுவை பயிர்களை காப்பாற்ற தமிழக அரசு உடனடியாக ஜிப்சம் உரத்தை வழங்க வேண்டுமென தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக கூட்டியக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரன் மற்றும் நிர்வாகிகள் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள அவசர கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள கடலூர் மாவட்டம் காவிரி டெல்டா மற்றும் டெல்டா அல்லாத பாசன அமைப்பு கொண்ட மாவட்டமாகும். ஆண்டுதோறும் கடலூர் மாவட்டத்தில், டெல்டா பாசன பகுதியில் சுமார் 25,000 ஏக்கர் அளவுக்கும், டெல்டா அல்லாத பாசன பகுதியில் சுமார் 75,000 ஏக்கர் அளவுக்கும் குறுவை சாகுபடி நடைபெறுகிறது. இந்த சாகுபடி முழுவதும் நிலத்தடி நீரை நம்பியே செய்யப்படுகிறது. நடப்பாண்டிலும் மாவட்டத்தில் ஆழ்குழாய் மூலம் மின்மோட்டார்களை கொண்டு நிலத்தடி நீரை இறைத்து பெரும்பாலான விவசாயிகள் தற்போது குறுவை பருவ சாகுபடி செய்துள்ளனர். சில விவசாயிகள் தற்போது நடவு செய்து வருகிறார்கள். நடவு செய்த குறுவை சாகுபடி வயல்களில் தினமும் தண்ணீர் விட்டு பயிர்களை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒருநாள் தண்ணீர் விடவில்லையெனில் நிலம் காய்ந்து பயிர்கள்  கருகிவிடும் அபாயம் உள்ளது. கடந்த காலங்களில் வேளாண் துறையின் சார்பில் ஜிப்சம் வழங்கப்படுவது வழக்கம். பெரும்பாலான விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி பயிருக்கு மட்டுமே இதனை பயன்படுத்தி வந்தனர். பருவமழை பொய்த்து போன காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவிய போது நெல் சாகுபடி விவசாயிகளால் மண்ணில் ஈரப்பதத்தை குறிப்பிட்ட கால அளவுக்கு பாதுகாக்க ஜிப்சம் உரம் பெருமளவில் பயன்படுத்தப்பட்டது. தமிழக அரசும் விவசாயிகளின் வேண்டுகோளுக்கு ஏற்ப ஜிப்சம் 50 சதவிகித மானியத்தில் வழங்கியது. சமீப ஆண்டுகளாக விவசாயிகளுக்கு தேவையான ஜிப்சம் உரத்தை வேளாண் துறை நேரடியாக விவசாயிகளுக்கு வழங்குவதில்லை.
மேலும் வேளாண் துறை மூலம் வழங்கப்படும் இடுபொருட்கள் அனைத்தும் பின்னேற்பு மானியம் வழங்கும் முறையால் ஜிப்சம் உள்ளிட்ட அனைத்து இடுபொருட்களும் வேளாண் துறை மூலம் வழங்கப்படுவது இல்லை. இதனால் உரக்கடைகளில் விற்கப்படும் ஜிப்சம் உரத்தின் விலை உயர்வால் விவசாயிகள் பெருமளவில் ஜிப்சம் உரத்தை தவிர்த்து வந்தனர்.

தற்போது நிலத்தடி நீர் மட்டம் குறைந்து முழுமையான அளவில் குழாய் மூலம் தண்ணீர் கிடைக்காமல் பற்றாக்குறை நிலவுவதாலும் வெயில் சுட்டெரிப்பதாலும் குறுவை சாகுபடி பயிர்கள் கருகும் அபாயம் உள்ளது. எனவே தமிழக அரசு குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவித்து அத்திட்டத்தின் வாயிலாக வேளாண் துறை டெப்போக்கள் மூலம்  50 சதவிகித மானியத்தில் ஜிப்சம் உரத்தை வழங்க நடவடிக்கை எடுத்து குறுவை சாகுபடி பயிர்களை காப்பாற்ற வேண்டும், இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : district ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...