×

அறிவிப்பு பலகையும் தப்பவில்லை ஆக்கிரமிப்பு குடிசைகளால் நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்

விருத்தாசலம், மே 25: விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகேயுள்ள ராஜேந்திரப்பட்டினம் ஊராட்சியில் சுமார் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். விருத்தாசலம்- கும்பகோணம் நெடுஞ்சாலையில் உள்ள இக்கிராமத்தில் நெடுஞ்சாலையோரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் கூடுதல் கட்டிடம் நெடுஞ்சாலையின் அடுத்த பகுதியில் உள்ளதால் பள்ளி மாணவர்கள்  தினந்தோறும் இந்த நெடுஞ்சாலையை கடந்து பயணம் செய்ய  வேண்டிய நிலை உள்ளது. மேலும் ராஜேந்திரப்பட்டினத்தின் பேருந்து நிறுத்தம் இங்கு உள்ளதால் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அப்பகுதியில் சாலையை கடந்து சென்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், வாகன ஓட்டுனர்கள் தெரிந்து கொள்ளும் வகையிலும், போக்குவரத்து போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையின் இருபுறங்களிலும் விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.


கடந்த சில நாட்களாக இந்த அறிவிப்பு பலகைகளை அடைத்தும், மறைத்தும் சில தனிநபர்கள் குடிசைகளை அமைத்து வருகின்றனர். இந்த அறிவிப்பு பலகைகள் மறைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிக வேகத்தில் வாகனத்தை இயக்கி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் மாதம் ஒரு விபத்து நடந்து வருகிறது. இந்நிலையில் மீண்டும் சாலை திருப்பங்களில் நெடுஞ்சாலைத்துறையினர் அறிவிப்பு பலகையை அமைத்தனர். அதனால் விபத்துக்கள் தவிர்க்கப்பட்டு வந்தது. தற்போதும் அறிவிப்பு  பலகைகள் மறைக்கப்பட்டுள்ளதால் மீண்டும் விபத்துகள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்து போலீசாரிடம் பலமுறை கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : accident ,highway ,
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...