×

37 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு விவிபேட் ஒப்புகை சீட்டு மூலம் முடிவு அறிவிப்பு

கடலூர், மே 25: கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் 37 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு காரணமாக விவிபேட் ஒப்புகை சீட்டுகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டதால் காலதாமதம் ஏற்பட்டது. கடலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது. மொத்தமுள்ள 1499 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளை 6 சட்டமன்ற தொகுதிகள் வாரியாக எண்ணப்பட்டது. சட்டமன்ற தொகுதிக்கு 14 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அப்போது ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் பல மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு காரணமாக திறக்க முடியவில்லை. கடலூர் சட்டமன்ற தொகுதியில் 7 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானது. குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, விருத்தாசலம் உள்பட அனைத்து தொகுதிகளிலும் மொத்தம் 37 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது காரணமாக திறக்க முடியவில்லை. இதனால், அந்தந்த சுற்றுகளில் பழுதான இயந்திரம் எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், 17வது சுற்று முடிவுகள் நேற்று முன்தினம் மாலை 7 மணியளவில் அறிவிக்கப்பட்ட நிலையில் 18வது சுற்று முடிவுகள் அறிவிக்க 2 மணி நேரத்திற்கும் மேல் தாமதம் ஆனது. 21 சுற்றுகள் எண்ணப்பட வேண்டிய நிலையில் இரவு 10.30 மணி வரையிலும் 19வது சுற்று முடிவு தெரிவிக்கப்படவில்லை. அதே நேரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணிய பின்னர் விவிபேட் இயந்திரத்தில் உள்ள ஒப்புகை சீட்டு 5 இயந்திரங்கள் எண்ணப்பட வேண்டும். ஆனால் மாவட்ட நிர்வாகம் மெத்தனமாக செயல்பட்டது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கூறுகையில், சில வாக்கு எண்ணிக்கை மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதால் அதிலுள்ள வாக்குகளை எண்ண முடியவில்லை. ஆனாலும், எத்தனை இயந்திரங்கள் பழுது என்ற விவரம் இல்லை.பழுதான இயந்திரத்தில் பதிவான வாக்குகளுக்கு பதிலாக விவிபேட் இயந்திரத்தில் உள்ள ஒப்புகை சீட்டு எண்ணப்பட்டு அதிலுள்ள வாக்குகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதற்காக வாக்கு எண்ணிக்கை நேரமும் நீடித்தது. மேலும் சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர்கள் இதனை கருத்தில் கொண்டு அதற்கேற்ற வகையில் செயல்பட்டனர். இதனால் காலதாமதம் ஏற்பட்டது என்றார்.

வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் மாலை 7 மணிக்கு பிறகு தொடர்ந்து நீடித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.20 மணி அளவில் இறுதிச்சுற்று வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டது.இதைதொடர்ந்து திமுக வேட்பாளர் ரமேஷ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றி அறிவிப்பு பல மணி நேரம் கடந்து அறிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திமுக ரமேஷ் அமோக வெற்றி
19 வேட்பாளர்கள் டெபாசிட் காலி

கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் ரமேஷ், பாமக சார்பில் டாக்டர் கோவிந்தசாமி உள்ளிட்ட 21 பேர் போட்டியிட்டனர். நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு துவங்கியது. இறுதி சுற்றில் திமுக வேட்பாளர் ரமேஷ் 5,19,594 வாக்குகளும், பாமக வேட்பாளர் கோவிந்தசாமி 3,76,628 வாக்குகளும் பெற்றனர். தபால் வாக்குப்பதிவில் திமுக வேட்பாளருக்கு 2,566 வாக்குகளும், பாமக வேட்பாளருக்கு 1,549 வாக்குகளும் கிடைத்தது. இதையடுத்து பதிவான மொத்த வாக்குகளில் திமுக 5,22,160 வாக்குகளும், அதையடுத்து அதிமுக கூட்டணியில் பாமக 3,78,187 வாக்குகளும் பெற்றனர். இதில் திமுக வேட்பாளர் ரமேஷ் 1,43,983 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.மக்கள் நீதி மய்யம் அண்ணாமலை 23,713 வாக்குகளும், அமமுக தங்கவேல் 44,887 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி சித்ரா 34,692 வாக்குகளும் பெற்றனர். கடலூர் தொகுதியில் திமுக, பாமக மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட 21 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட 19 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். நோட்டாவுக்கு 8660 வாக்குகள் கிடைத்தது.


₹1 லட்சம் காப்பர் கம்பி திருடியவர் கைது

நெய்வேலி, மே 25: நெய்வேலி என்எல்சி 2வது சுரங்கம் பாதுகாப்பு படைவீரராக பணியாற்றி வருபவர் ரமணா. இவர் நேற்று முன்தினம் அங்குள்ள பங்கரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது செக்கூர் கிராமத்தை சேர்ந்த அப்துல்கலாம் மகன் சேட் முகம்மது (40) மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் சுரங்கத்தில் உள்ள 40 மீட்டர் காப்பர் கம்பிகளை வெட்டி திருடிச் சென்றனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். அப்போது பாதுகாப்பு படை வீரர் ரமணா அவர்களை பிடிக்க முயன்றார். இருப்பினும் அவர்கள் சிக்காமல் தப்பியோடினர். இதில் சேட் முகம்மது மட்டும் பிடிபட்டார். பின்னர் மந்தாரக்குப்பம் காவல்நிலையத்தில் அவர் ஒப்படைக்கப்பட்டார். இதுகுறித்து சுரங்க அதிகாரி சந்திரசேகர் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிந்து சேட் முகம்மதுவை கைது செய்தார். திருடிய காப்பர் கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags :
× RELATED லாரி மோதி முன்னாள் திமுக நகர செயலாளர் பலி