தாமிரபரணி கரையில் இருந்தும் வைகுண்டத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு

வைகுண்டம், மே 25: தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள வைகுண்டம் பேரூராட்சியில் நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். குடிநீரை விலைக்கு வாங்கி குடிக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டு உள்ளனர். தாலுகா நகரமாக திகழும் வைகுண்டத்தில் தாலுகா அலுவலகம், அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள், அரசு போக்குவரத்து பணிமனை, கல்வி நிறுவனங்கள், வங்கிகள், சார்பதிவாளர் அலுவலகம், காவல் நிலையம் போன்றவை அமைந்துள்ளன. வைகுண்டம் பேரூராட்சியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். ஆன்மிக நகரமாக திகழும் வைகுண்டத்திற்கு நாள்தோறும் ஏராளமான எண்ணிக்கையில் வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து சுற்றுலாப்பயணிகளும் வந்து செல்கின்றனர். வைகுண்டம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளுக்கும் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் தினமும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

Advertising
Advertising

தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள வைகுண்டம் நகர மக்களுக்கு தாமிரபரணி ஆற்றின் உட்பகுதியில் உறைகிணறுகள் அமைக்கப்பட்டு அதில் இருந்து குடிநீர் எடுத்து, சுத்திகரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இதற்கான நீரேற்று நிலையம், மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள், குடிநீரை சுத்திகரிக்கும் நவீன இயந்திரங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில், வைகுண்டம் நகர மக்களுக்கு கடந்த ஒருவார காலத்திற்கும் மேலாக சரியான முறையில் குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. தாழ்வான சில பகுதி மக்களுக்கு மட்டும் குறைந்த அளவில் குடிநீர் கிடைத்து வருகிறது. மற்ற பகுதிகளில் குடிநீர் கிடைக்காத மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளதுடன், குடிநீரை தனியார்களிடம் இருந்து விலை கொடுத்து வாங்கி குடிக்கும் பரிதாப நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

குடிநீர் கிடைக்காத பொதுமக்கள் டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் கேட்டதற்கு, ‘‘குடிநீர் தொட்டியின் வால்வு பழுதால் தண்ணீரின் அழுத்தம் குறைவாக இருப்பதாகவும், அனைத்து மக்களுக்கும் குடிநீர் வழக்கம்போல விநியோகம் செய்யப்படுகிறது. தண்ணீரின் அழுத்தம் சீராகும்பட்சத்தில் குடிநீர் அனைத்து வீடுகளுக்கும் வழக்கம்போல வந்துவிடும்'' என்று கூறுகின்றனர். ஆனாலும், பலநாட்கள் கடந்தும் குடிநீர் விநியோகம் சீராகவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் பெரும் பரிதவிப்பிற்கு ஆளாகி அவதிப்பட்டு வருகின்றனர். தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் இருந்தபோதும் குடிநீர் கிடைக்காத பொதுமக்கள் நித்தம் நித்தம் கண்ணீர் வடித்து வருவது வேடிக்கை மட்டுமல்ல வேதனையும் தான். இனியாவது பொறுப்புணர்ந்த அதிகாரிகள் குடிநீர் விநியோகம் சீராக உரிய நடவடிக்கை எடுத்தால் சரிதான் என்பதே பொதுமக்களின் பலமானகோரிக்கையாகும்.

சரியாக செயல்படாத சுத்திகரிப்பு நிலையம்

 

வைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் உறைகிணறு அமைக்கப்பட்டு குடிநீர் எடுத்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. ஆற்றின் உட்பகுதியில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் குடிப்பதற்கு உகந்ததாக இல்லாத நிலையில், குடிநீரை சுத்திகரித்து வழங்கிட ஏதுவாக நவீன சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. பல லட்சம் ரூபாய் செலவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்த இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் தற்போது சரியாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டும் பலமாக எழுந்துள்ளது. இதற்கேற்ப குடிநீரின் சுவை குடிப்பதற்கு உகந்ததாக இல்லாத வகையில் மாறி இருப்பதுடன், குடிநீர் சிலநேரங்களில் நிறம்மாறி மிகவும் கலங்கலாக வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories: