பேய்குளம் அருகே பாலத்திற்கு தோண்டிய சாலை சீரமைக்கப்படாததால் விபத்து அபாயம்

சாத்தான்குளம், மே 25: பேய்குளம்  அருகே பாலம் அமைக்க தோண்டப்பட்ட சாலை சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள்  மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனால் விபத்து அபாயம் காணப்படுவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சாத்தான்குளம் அருகே உள்ள  பேய்குளத்துக்கு அடுத்து கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட  கிராமங்கள் வருகின்றன. பேய்குளம் பகுதியில் இருந்து வைகுண்டம்,  கருங்குளம், உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பேருந்து மற்றும் இதர வாகனங்களில்  மக்கள் சென்று திரும்புகின்றனர். பேய்குளத்தில் இருந்து அரசர்குளம்  செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்பட்டதால் கடந்த ஒரு மாதத்திற்கு முன் புதிய சாலை அமைக்கப்பட்டது. இதனால் வாகனங்களில் எளிதில் சென்று திரும்பினர்.  

Advertising
Advertising

இந்நிலையில் சாலை இடையே தாம்போதி பாலத்தை உடைத்து தரைமட்ட பாலம் அமைக்கும் பணியை நெடுஞ்சாலை துறையினர் துவக்கினர். இதற்காக தாம்போதி உடைக்கப்பட்டு பெரிய குழாய்கள் பதிக்கப்பட்டன. தொடர்ந்து மணல் கொண்டு மூடப்பட்ட நிலையில், பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் சாலை நடுவே அப்பகுதி பெரிய மேடு போன்று காட்சியளிக்கிறது. இதன் காரணமாக அவ்வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் தடுமாறி செல்வது வாடிக்கையாகி விட்டது. மேலும் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து அபாயமும் காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு கிடப்பில் போடப்பட்டுள்ள பாலப்பணிகளை விரைந்து முடித்து அப்பகுதியில் சேதமான சாலையை விரைந்து சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: