×

தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிட்ட அமைச்சர், எம்எல்ஏ, எம்பிக்களின் 19 வாரிசுகளும் தோல்வி பரபரப்பு தகவல்கள்

திருமலை, மே 25: தெலுங்கு தேசம் கட்சி சார்பில் சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் போட்டியிட்ட அமைச்சர், எம்எல்ஏ, எம்பிக்களின் 19 வாரிசுகளும் தோல்வியடைந்தனர். ஆந்திர மாநில முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு தனது மகன் லோகேசை முதல் முறையாக தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார். முதலில் குப்பம் தொகுதியில் போட்டியிட முடிவு செய்யப்பட்ட நிலையில் இறுதியாக குண்டூர் மாவட்டம், மங்களூரில் லோகேசை போட்டியிட வைத்தார். இந்த தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ராமகிருஷ்ணா வெற்றி பெற்ற நிலையில் லோகேஷ் 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். இதேபோன்று மூத்த அரசியல் தலைவரும் முன்னாள் மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சருமான அசோக் கஜபதி ராஜு விஜயநகரம் மக்களவைத் தொகுதியிலும் அவரது மகள் அதிதி விஜயநகரம் சட்டப்பேரவை தொகுதியிலும் போட்டியிட்டனர். இவர்கள் இருவருமே தோல்வியை தழுவினர்.
அதே போன்று சிப்புருப்பல்லியில் முன்னாள் அமைச்சர் கிம்மிடி மிருலாலினி மகன் நாகார்ஜுனா, அரக்கு தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ கிடாரிம்சர்வேஸ்வரராவ் மகன் கிடாரி ஸ்ராவன்குமார் தேல்வி அடைந்தார்.

எம்.பி.டி.ஜி வெங்கடேஷ் மகன் பரத் கர்னூல் தொகுதியில் இருந்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அனந்தப்பூர் மாவட்டத்தில் சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் இருந்த பரிதால சுனிதா தனது மகன் பரிதால ராமை ராத்தாடு தொகுதியில் போட்டியிட வைத்தார். அவரும் தோல்வியை தழுவினார். இதே போன்று ஜெ.சி. சகோதரர்கள் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறி ஜெ.சி.திவாகர் ரெட்டி மகன் பவனை அனந்தப்பூர் மக்களவை தொகுதியிலும் ஜெ.சி. பிரபாகர் ரெட்டி மகன் அஸ்மித் தாடிபத்திரி தொகுதியிலும் போட்டியிட்டனர். இவர்கள் இருவரும் தோல்வி அடைந்தனர்.

இதுதவிர ஆந்திர மாநில துணை முதல்வராக இருந்த கே.இ.கிருஷ்ணமூர்த்தி வயது மூப்பு காரணமாக அவரது மகன் ஷாம்மை பத்திகொண்டா தொகுதியிலும், காளஹஸ்தி தொகுதி முன்னாள் அமைச்சர் கோபாலகிருஷ்ண ரெட்டியின் மகன் சுதிர், உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்த முன்னாள் எம்.எல்.சி. காலிமுத்துகிருஷ்ணம்ம நாயுடு மகன் காலி பானு ஆகியோரும் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினர். கங்காதர நல்லூர் தொகுதியில் இருந்து முன்னாள் சட்டப்பேரவை துனை சபாநாயகர் குதுகலம்மா மகன் ஹரிகிருஷ்ணா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நாராயணசாமியிடம் தோல்வி அடைந்தார். காகுளம் மாவட்டம், பலாசா தொகுதியில் 6 முறை தொடர்ந்து வெற்றி பெற்ற ஷாம்சுந்தர சிவாஜி அவரது மகள் சிரிஷாவை போட்டியில் நிறுத்தினார். இவர் ஸ்ரீகாகுளம் மாவட்ட தெலுங்கு தேசம் கட்சி தலைவராகவும் இருந்த நிலையில் அவரும் தோல்வி அடைந்தார். கிருஷ்ணா மாவட்டம், குடிவாடா வில் இருந்து தேவினேனி நேரு மகன் தேவினேனி அவினாஷ், மேற்கு விஜயவாடா தொகுதியில் இருந்து ஜலில்கான் மகள் ஷபானா அதுல், பெடனா தொகுதியில் இருந்து வெங்கட்ராவ் மகன் கிருஷ்ண பிரசாத் ஆகியோர் போட்டியிட்டு தோல்வி அடைந்தனர்.

இதேபோன்று விசாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் எம்.வி.எஸ் மூர்த்தியின் உறவினர் பரத், ராஜமுந்திரி மக்களவைத் தொகுதியில் எம்பியும் நடிகருமான முரளிமோகன் மருமகள் ரூபா, அமலாபுரம் தொகுதியில் ஜி.என்.சி பாலையா உறவினர் ஹரிஷ் போட்டியிட்டு தோல்வி அடைந்தனர். ராஜ மகேந்திராவரம் சட்டப்பேரவைத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் எர்ரம் நாயுடுவின் மகள் ஆதிரெட்டிபவானி மட்டும் வாரிசு அரசியல் வழியாக வந்தவர்களில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களவை மற்றும் ஆந்திர மாநில சட்டப்பேரவை ேதர்தலின்போது வேட்பாளர்களை தேர்வு செய்யும்போது அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் தங்களுக்கு சீட் தராவிட்டாலும் பரவாயில்லை, எங்களது பிள்ளைகளுக்கு சீட்டு கொடுங்கள் என்று நெருக்கடி கொடுத்து வாங்கி உள்ளனர். அதேபோல் வேட்பாளர்கள் தேர்வில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷின் தலையீடு அதிகமாக இருந்ததாகவும் தோல்விக்கு இதுவும் முக்கிய காரணம் என்றும் கட்சியினர் வேதனையுடன் கூறினர்.

குப்பத்தில் மகனை நிறுத்த சந்திரபாபு ஆலோசனை

இதற்கிடையே தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தான் வெற்றி பெற்ற சித்தூர் மாவட்டம், குப்பம் சட்டப்பேரவை தொகுதியை ராஜினாமா செய்துவிட்டு அங்கு தனது மகனை மீண்டும் போட்டியிட வைக்க ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. லோகேஷின் எதிர்கால அரசியலை முன்வைத்து இந்த நடவடிக்கையை அவர் எடுக்க உள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது.

Tags : Telugu Desam Party ,failure ,MLA ,MPs ,
× RELATED ஆந்திர மாநில தேர்தலில் மதுபானம் ஆறாக...