×

தி.மலை திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை அமோக வெற்றி கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

திருவண்ணாமலை, மே 24: திருவண்ணாமலை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை, 3,04,187 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.திருவண்ணாமலை மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 18ம் தேதி நடந்தது. இதில் சி.என்.அண்ணாதுரை(திமுக), அக்ரி எஸ்.கிருஷ்ணமூர்த்தி(அதிமுக), அ.ஞானசேகர் (அமமுக), ரா.அருள் (ம.நீ.மய்யம்) உள்பட 25 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்நிலையில், திருவண்ணாமலை மக்களவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு, திருவண்ணாமலை மார்க்கெட் கமிட்டி வளாகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியான கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, மத்திய தேர்தல் பார்வையாளர்கள் ரஷீத்கான், நீரப்குமார் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. வாக்கு எண்ணும் பணியில் 700 அலுவலர்கள் ஈடுபட்டனர்.முன்னதாக, வாக்கு எண்ணிக்கையையொட்டி வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மத்திய போலீஸ் படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.இந்நிலையில், நேற்று அதிகாலை 5.30 மணியளவில் வாக்கு எண்ணும் அலுவலர்களும், காலை 7 மணி அளவில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்களும் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். மையத்துக்குள் செல்லும் அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரையும் முழுமையாக சோதித்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மேலும், வாக்கு எண்ணும் மையங்கள் சிசிடிவி கேமரா கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டன.
இதைத்தொடர்ந்து, நேற்று காலை 8 மணிக்கு, தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது. இதைத்தொடர்ந்து, மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள், சட்டப்பேரவை தொகுதிகள் வாரியாக எண்ணப்பட்டது.

அதன்படி, திருவண்ணாமலை மக்களவை தொகுதிக்குட்பட்ட கீழ்பென்னாத்தூர், திருவண்ணாமலை, செங்கம், கலசபாக்கம், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில், ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் 14 மேசைகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஒரு சுற்றுக்கு 84 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வீதம், திருவண்ணாமலை தொகுதியில் 24 சுற்றுகள் வாக்குகள் எண்ணப்பட்டது.இதில் திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் மொத்தமுள்ள 14,73,862 வாக்குகளில், 11,39,412 வாக்குகள் பதிவாகி இருந்தது. மேலும், 7922 தபால் ஓட்டுகள் பதிவானதில், 680 ஓட்டுகள் எண்ணிக்கையின்போது செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. இதில் திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரைக்கு 4553 தபால் வாக்குகளும், அதிமுக வேட்பாளர் அக்ரி எஸ்.கிருஷ்ணமூர்த்திக்கு 1829 வாக்குகளும், அமமுக வேட்பாளர் ஏ.ஞானசேகருக்கு 136 வாக்குகளும், ம.நீ.மய்யம் வேட்பாளர் ரா.அருளுக்கு 142 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் ரமேஷ்பாபுவிற்கு 245 வாக்குகளும், நோட்டாவிற்கு 94 வாக்குகளும் கிடைத்தது.
மேலும், 24 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை, தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அக்ரி.எஸ்.கிருஷ்ணமூர்த்தியை விட 3,04,187 வாக்குகள் அதிகம் பெற்று அமோக வெற்றி பெற்றார்.

இதைத்தொடர்ந்து, திமுகவினர் பட்டாசு வெடித்தும், தொண்டர்களுக்கு இனிப்பும் வழங்கியும் கொண்டாடினர். பின்னர், வெற்றி பெற்ற வேட்பாளர் சி.என்.அண்ணாதுரைக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி சான்றிதழ் வழங்கினார். அப்போது, முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, கு.பிச்சாண்டி, செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி, எ.வ.வே.கம்பன், முன்னாள் நகராட்சி தலைவர் இரா.தரன் ஆகியோர் உடனிருந்தனர்.பின்னர், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு எம்எல்ஏ கூறியதாவது:
கடந்த 8 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் மக்கள் விரோத நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மக்கள், இந்த தேர்தலில் மகத்தான பெற்றியை திமுகவிற்கு அளித்துள்ளனர்.திருவண்ணாமலை வேட்புமனு தாக்கலின்போது, 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம் என எதிர்பார்த்தோம். ஆனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தீவிர பிரசாரத்தால் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி அடைந்துள்ளோம் என்றார்.இதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை கூறுகையில், `இந்த வெற்றி திமுகவிற்கு கிடைத்த வெற்றி, மக்களுக்கு கிடைத்த வெற்றி. இதனை வணங்கி ஏற்றுக் கொள்கிறேன். வரும் 5 ஆண்டுகளில் நேர்மையாகவும், மக்களுக்கு சொல்லிய வாக்குறுதிகள் அனைத்தையும் தவறாமல் நிறைவேற்றுவேன் என்றார்.
கேப்சன்திருவண்ணாமலை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 3,04,187 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.


Tags : CN Annadurai ,DM DMK ,donation party ,
× RELATED திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில்...