×

ஆரணி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத் அபார வெற்றி

ஆரணி, மே 24: ஆரணி மக்களவை தொகுதியில் மதசார்பற்ற கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத், அதிமுக வேட்பாளர் வெ.ஏழுமலையைவிட 2,30,806 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியடைந்தார்.ஆரணி மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 18ம் தேதி நடந்தது. இத்தொகுதியில் எம்.கே.விஷ்ணுபிரசாத் (காங்கிரஸ்), வெ.ஏழுமலை(அதிமுக), ஜி.செந்தமிழன்(அமமுக), வி.ஷாஜி (ம.நீ.மய்யம்) உள்பட 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.இந்நிலையில், ஆரணி மக்களவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணியளவில், திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்தல் நடத்தும் அதிகாரியான டிஆர்ஓ ரத்தினசாமி, மத்திய தேர்தல் பார்வையாளர்கள் யாமினி சாரங்கி, லஷ்மிகாந்தன் முன்னிலையில் நடந்தது. வாக்கு எண்ணும் பணியில் 700 அலுவலர்கள் ஈடுபட்டனர்.இதையொட்டி, வாக்கு எண்ணும் மையத்தில் ஏடிஎஸ்பி ஞானசேகரன் தலைமையில், 4 டிஎஸ்பிக்கள், 10 இன்ஸ்பெக்டர்கள், 40 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 400 போலீசார் மூன்றடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.மேலும், ஆரணி மக்களவை தொகுதிக்குட்பட்ட போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, செஞ்சி, மயிலம் சட்டப்பேரவை தொகுதிகளில், ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் 14 மேசைகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஒரு சுற்றுக்கு 84 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வீதம், ஆரணி தொகுதியில் 23 சுற்றுகள் வாக்குகள் எண்ணுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

முன்னதாக, நேற்று அதிகாலை 6 மணியளவில் வாக்கு எண்ணும் அலுவலர்கள், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். மையத்துக்குள் அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரையும் முழுமையாக சோதித்த பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, பாதுகாப்பு பெட்டக அறையில் இருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் நடத்தும் அலுவலர் ரத்தினசாமி தலைமையில், அனைத்து கட்சி வேட்பாளர்கள் முன்னிலையில் சீல் உடைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டது.இதைத்தொடர்ந்து, ஆரணி மக்களவை தொகுதியில் மொத்தமுள்ள 14,45,781 வாக்குகளில், 11,41,699 வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. மேலும், மொத்தம் பதிவான 7692 தபால் ஓட்டுகளில், எண்ணிக்கையின்போது 943 ஓட்டுகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. 6749 தபால் ஓட்டுகள் ஏற்கப்பட்டன. இதுதவிர, சர்வீஸ்மேன்களுக்கான 3369 ஓட்டுகளில், 1750 தபால் ஓட்டுகள் பதிவாகி இருந்தது.மேலும், 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வெ.ஏழுமலையைவிட 2,30,806 வாக்குகள் அதிகம் பெற்று அமோக வெற்றி பெற்றார்.

இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்தும், தொண்டர்களுக்கு இனிப்பும் வழங்கியும் வெற்றியை கொண்டாடினர். பின்னர், வெற்றி பெற்ற வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத்திற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் டிஆர்ஓ ரத்தினசாமி சான்றிதழ் வழங்கினார். அப்போது, முன்னாள் அமைச்சர் எ.வ.ேவலு, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சிவானந்தம், முன்னாள் எம்பி கிருஷ்ணசாமி, செஞ்சி திமுக எம்எல்ஏ மஸ்தான், போளூர் எம்எல்ஏ கே.வி.சேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர், வெற்றிபெற்ற வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத் கூறுகையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஆரணி தொகுதி ஒதுக்கப்பட்டது. மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, மாவட்ட செயலாளர் சிவானந்தம் மற்றும் கூட்டணி கட்சியினரின் தீவிர பிரசாரத்தில் அமோக வெற்றி கிடைத்துள்ளது. எனவே, ஆரணி தொகுதி மக்களின் நலனுக்காக மக்களவையில் குரல் எழுப்பி தேர்தலில் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன்'என்றார்.இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தீவிர பிரசாரத்தால் ஆரணி தொகுதியில் அமோக வெற்றி கிடைத்துள்ளது' என்றார்.
ஆர்டிஓவிடம் வாக்குவாதம்
=====================
முன்னதாக, செய்யாறு சட்டப்பேரவை தொகுதி முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின்போது, மக்கள் நீதிமய்யம் கட்சி வேட்பாளர் ஷாஜி அறைக்குள் வந்தார். அவர் நீண்ட நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்ததால், பிற கட்சிகளை சேர்ந்த பூத் ஏஜெண்டுகள் கூச்சலிட்டனர். மேலும், பிற வேட்பாளர்கள் தங்களையும் உள்ளே செல்ல அனுமதிக்குமாறு உதவி தேர்தல் அலுவலர் அன்னம்மாளிடம் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து, வேட்பாளர் ஷாஜியை அவருக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அமருமாறு அறிவுறுத்தினார். இதனால் சிறிது நேரம் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு
============================
அதேபோல், செஞ்சி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட வாக்கு எண்ணிக்கையின்போது முதல் இரண்டு சுற்றுகள் மட்டும் உள்ளே பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அப்பாசாமி, சரத்குமார் ஆகியோர் பத்திரிகையாளர்களை உள்ளே விடவில்லை. மேலும், டிஎஸ்பி குத்தாலிங்கத்திடம் ஒப்புதல் பெற்றால் தான் உள்ளே அனுமதிக்க முடியும் என கூறினர்.இதனால் ஆத்திரமடைந்த பத்திரிகையாளர்கள் ஒட்டு மொத்தமாக அங்கு குவிந்தனர். போலீசாருக்கும், பத்திரிகையாளர்களுக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த டிஎஸ்பி குத்தாலிங்கம், தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று இருக்கும் பத்திரிகைகளை உள்ளே விடும்படி அறிவுறுத்தினார். பின்னர், ஆறாவது சுற்றிற்கு பிறகே பத்திரிகையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : MK Vishnuprassad ,constituency ,Lok Sabha ,Congress ,victory ,
× RELATED பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் IJK...