×

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் 2.65 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கொமதேக வேட்பாளர் வெற்றி

நாமக்கல், மே 24: நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட கொமதேக வேட்பாளர் சின்ராஜ், அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் காளியப்பனை விட 2.65 லட்சம் வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிபெற்றார். நாமக்கல் நாடளுமன்ற தொகுதிக்கு, கடந்த மாதம் 18ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி என 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் 5,55,803 ஆண் வாக்காளர்கள், 5,73,764 பெண் வாக்காளர்கள், 43 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 14,13,246 பேர் உள்ளனர்.

நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் கொமதேகவை சேர்ந்த சின்ராஜ்,  காளியப்பன் (அதிமுக), சாமிநாதன் (அமமுக), தங்கவேல் (மநீம), பாஸ்கர் (நாம் தமிழர் கட்சி) மற்றும் 24 சுயேச்சைகள் என 29 பேர் போட்டியிட்டனர். கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் தபால் வாக்குகள் உள்பட 11,33,984  வாக்குகள் பதிவாகியிருந்தது.

தேர்தலுக்கு பின் வாக்கு இயந்திரங்கள், திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் உள்ள மையத்தில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் ஆசியாமரியம், தேர்தல் பொது பார்வையாளர் வாணி மோகன் மற்றும் அரசியல் கட்சியின் வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடந்தது.

வாக்கு எண்ணிக்கை 23 சுற்றுகள் நடந்தது. இதில் திமுக கூட்டணி வேட்பாளர் சின்ராஜ் (கொமதேக) 6,26,293 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் காளியப்பன் 3,61,293 வாக்குகளே பெற்றார். திமுக வேட்பாளர் சின்ராஜ் 2,65,000 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

தவிர, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாஸ்கர் 38,531  வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் தங்கவேல் 30,947 வாக்குகளும், அமமுக  வேட்பாளர் சாமிநாதன் 23,347 வாக்குகளும் பெற்றிருந்தனர். நோட்டாவுக்கு 15,073 வாக்குகள் பதிவாகியிருந்தது. வாக்கு எண்ணிக்கை முடிந்ததை அடுத்து, வேட்பாளர் சின்ராஜூக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

நாமக்கல் நாடாளுமன்ற தேர்தல் பொது பார்வையாளர் வாணி மோகன் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் ஆசியா மரியம் சான்றிதழை வழங்கினர். அதை வெற்றி பெற்ற வேட்பாளர் சின்ராஜ் பெற்றுக்கொண்டார். அவருடன் கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் காந்திசெல்வன், சூரியமூர்த்தி மற்றும் கட்சியினர் உடனிருந்தனர்.

Tags : constituency ,candidate ,Namakkal ,Kompta ,
× RELATED நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள்...