×

கிருஷ்ணகிரியில் 1.56 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் செல்லக்குமார் வெற்றி

கிருஷ்ணகிரி, மே 24: கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில், திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் செல்லக்குமார் 1.56 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில், டாக்டர் செல்லக்குமார் (காங்கிரஸ்), முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி (அதிமுக), எஸ்.கணேசகுமார் (அமமுக), காருண்யா (மநீம), மதுசூதனன்(நாம் தமிழர் கட்சி) மற்றும் 10 சுயேட்சைகள் போட்டியிட்டனர்.

கடந்த மாதம் 18ம் தேதி நடந்த வாக்குப்பதிவில். 11,61,369 வாக்குகள் பதிவானது. வாக்கு எண்ணிக்கை கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று நடந்தது.
முதல் சுற்று முடிவில் திமுக கூட்டணி வேட்பாளர் செல்லகுமார் (காங்கிரஸ்) 23,656 வாக்குகள், அதிமுக வேட்பாளர் முனுசாமி 21,214 வாக்குகள், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதுசூதனன் 1,003 வாக்குகள், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் காருண்யா 423 வாக்குகள், அமமுக வேட்பாளர் எஸ்.கணேசகுமார் 307 வாக்குகள் பெற்றனர். இதில், நோட்டாவுக்கு 821 வாக்குகள் பதிவாகியது.

அடுத்தடுத்த சுற்றுகளில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையில் வந்து கொண்டிருந்தார். வாக்கு எண்ணிக்கை முடிவில் செல்லக்குமார் 6,11,298 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமி 4,54,533 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் செல்லகுமார், 1,56,765 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து, மாவட்டம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். வெற்றி பெ ற்ற செல்லக்குமாருக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி பிரபாகர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.

Tags : Selakkumar ,Congress ,Krishnagiri ,
× RELATED முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில்...