×

தர்மபுரியில் திமுக வேட்பாளர் செந்தில்குமார் வெற்றி

தர்மபுரி, மே 24:  தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில், திமுக வேட்பாளர் டாக்டர் செந்தில்குமார், அமோக வெற்றி பெற்றுள்ளார். தர்மபுரி நாடாளுமன்ற தேர்தலில், திமுக சார்பில் டாக்டர் செந்தில்குமார், பாமக சார்பில் டாக்டர் அன்புமணி ராமதாஸ், அமமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் ஆகியோர் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணியளவில், செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் தொடங்கியது. முதல் 5 சுற்றுகள் வரை பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் முன்னிலை வகித்து வந்தார்.

ஆனால், அதன்பின்னர் நிலைமை தலைகீழாக மாறத் தொடங்கியது. 5வது சுற்று முதல் தொடர்ந்து 20வது சுற்று வரை திமுக வேட்பாளர் செந்தில்குமாரே முன்னிலை வகித்தார். 20வது சுற்று முடிவில், திமுக வேட்பாளர்  செந்தில்குமார் 5,20,114 வாக்குகளும், பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ்  4,22,170 வாக்குகளும் பெற்றிருந்தனர். இதில் அன்புமணியை விட,  திமுக வேட்பாளர் செந்தில்குமார் 97,944 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில்  உள்ளார்.  இதன் மூலம் அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் மாவட்டத்தில் மண்ணை கவ்விய பாமக
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி, உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகனின் சொந்த மாவட்டம் என்பதால், பாமக வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு ஆதரவாக, தொகுதி முழுவதும் அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். மேலும், பாமகவுக்கு சாதகமான தொகுதி என கண்டறியப்பட்ட தர்மபுரியில், அன்புமணி சுலபமாக வெற்றி பெறுவார் என்றே அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்தனர்.

இந்த நிலையில், திமுக வேட்பாளர் செந்தில்குமார், அன்புமணியை விட 97 ஆயிரத்து 944 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றது பாமக, அதிமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர் தீவிர பிரசாரம் செய்தும், அவரது சொந்த தொகுதியில் பாமக மண்ணை கவ்வியதால், பாமக மற்றும் அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Senthilkumar ,DMK ,Dharmapuri ,
× RELATED பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம்