×

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் 52 விவி பேட்களில் வாக்கு எண்ணிக்கை

நாகர்கோவில், மே 24:  கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் 52 விவி பேட்களின் வாக்கு எண்ணிக்கை விடிய விடிய நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு கோணம் பாலிடெக்னிக் மையத்தில் காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை அமைதியான முறையில் தொடர்ந்து நடைபெற்றது. தமிழகத்தின் பெரும்பாலான தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை முடிந்த போதிலும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தாமதம் அடைந்த நிலையில் தொடர்ந்து நடைபெற்றது.

தபால் ஓட்டுகள் எண்ணிக்கை தொடங்குவதில் குளறுபடிகள் ஏற்பட்டு இரவு 10 மணி வரை தபால் ஓட்டுகள் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையே பல பூத்களில் மின்னணு இயந்திரங்கள் சரியான முறையில் வாக்குபதிவுக்கு பிந்தைய வேளையில் மூடப்படாமலும், உரிய முறையில் கையாளப்படாமலும் ஒப்படைக்கப்பட்டதால் அவற்றில் வாக்கு எண்ணிக்கை தொடங்க அலுவலர்கள் முற்பட்டபோது ‘நாட் ஒகே’ என்று அடையாளம் காட்டியதால் சிக்கல்கள் எழுந்தன.

இவ்வாறு 6 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 19 மின்னணு இயந்திரங்கள் திறக்க முடியாமலும், வாக்கு எண்ணிக்கை நடத்த முடியாமலும் நிலைமை உருவானது. அப்போது அவை தனியே வைக்கப்பட்டன. கடைசியில் அந்த மின்னணு இயந்திரங்களுக்கான விவி பேட் ரசீதுகளை எண்ணி முடிவை அறிவிக்க முடிவு செய்யப்பட்டது. இவை தவிர சட்டமன்ற தொகுதிக்கு 5 வீதம் 30 மின்னணு இயந்திரங்களை குலுக்கல் முறையில் எடுத்து சரிபார்த்து மின்னணு இயந்திரத்துடன் ஒப்பீடு செய்ய வேண்டும்.

மேலும் விளவங்கோடு தொகுதியில் 2, கிள்ளியூர் தொகுதியில் ஒரு வாக்குசாவடி என மூன்று வாக்கு சாவடிகளில் மாதிரி வாக்குபதிவின்போது மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை நீக்காமல் வாக்குபதிவு தொடர்ந்ததால் விவிபேட்களில் பதிவான வாக்குகளை எண்ண வேண்டிய நிலை ஏற்பட்டது.

அந்த வகையில் மொத்தம் 52 விவி பேட்களை எடுத்து அதில் உள்ள ரசீதுகளை எண்ணி சரிபார்க்க நடவடிக்கைகள் தொடங்கின. இந்த பணிகள் இரவு 9 மணிக்கு தொடங்கிய நிலையில் இது நிறைவு பெற 5 மணி நேரம் ஆகும் எனவும், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் உடன் இருந்து உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கலெக்டர் பிரசாந்த் வடநேரே வேண்டுகோள் விடுத்தார். இதனால் நள்ளிரவு 1 மணிக்கு பின்னரும் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்தது.

வாக்குபெட்டி முறைகளில் இருந்து மின்னணு இயந்திரத்திற்கு மாறிய பின்னர் மீண்டும் நள்ளிரவு கடந்து வாக்கு எண்ணிக்கை இம்முறை நடைபெற்றது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது. டேபிள்களை குறைத்து சுற்றுக்கள் எண்ணிக்கையை 28 ஆக அதிகரித்தது, சரியான பயிற்சி பெறாத வாக்கு பதிவு அலுவலர்களால் இயந்திரங்கள் சரியான முறையில் ‘குளோஸ்’ செய்யாததால் அவற்றை திறப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள், மாதிரி வாக்குபதிவு நடைபெற்றபோது எழுந்த குளறுபடிகள் தற்போது வாக்கு எண்ணிக்கை நள்ளிரவு வரை நீடிக்க காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது.

கடைசி நேரத்தில் கலெக்டர் ‘டென்ஷன்’
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் 26வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை கலெக்டரின் கையெழுத்து போடாமல் அலுவலர்கள் வெளியிட்டதாக கூறப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை விபரத்தை அறிவிப்பு பலகையிலும் எழுதிவிட்டனர். இதனால் டென்ஷன் ஆன கலெக்டர் தனது கையெழுத்து இல்லாமல் எப்படி வெளியிடலாம் என கேட்டு வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவித்து வந்த ஓப்பன் மைக்கில் அலுவலர்களை கண்டித்து பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

12 மணி நேரம் காத்திருந்த பொன்.ராதாகிருஷ்ணன்
கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய வேளையில் காலை 8.30 மணியளவில் பொன்.ராதாகிருஷ்ணன் மையத்திற்கு வருகை தந்தார். இரவு 8.15 மணி வரை சுமார் 12 மணி நேரம் அவர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அமர்ந்திருந்தார். பின்னர் திரும்பி சென்றார்.

Tags : VVPs ,constituency ,Kanyakumari Lok Sabha ,
× RELATED கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில்...