×

திருவாரூர் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு எம்பி, எம்எல்ஏ தொகுதிகளுக்கான இயந்திரங்கள் மாறியதால் குழப்பம் கட்சியினர் எதிர்ப்பால் 30 நிமிடம் நிறுத்தம்

திருவாரூர், மே 24: திருவாரூர் வாக்கு எண்ணும் மையத்தில் எம்பி, எம்எல்ஏ தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாறியிருந்ததால் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் 30 நிமிடம் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து மீண்டும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.திருவாரூர் திருவிக அரசு கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்தது. 2வது சுற்று வாக்கு எண்ணிக்கையின்போது எம்பி தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரம் எம்எல்ஏ தொகுதி வாக்கு இயந்திரங்கள் அறையிலும், இங்குள்ள இயந்திரம் எம்பி தொகுதி அறையிலும் மாற்றி வைத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு கட்சியினர், வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தகவலறிந்த தேர்தல் பொது பார்வையாளர் சந்திரகாந்த் டாங்கே வந்து விசாரித்தார். இதில் திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் எண்கண் என்ற கிராமத்தின் 16வது பூத்தில் எம்பி, எம்எல்ஏ வாக்குப்பதிவு நடந்தது. இயந்திரங்கள் சீல் வைத்து எடுத்து வாக்கு எண்ணும் மையத்துக்கு எடுத்து வந்தபோது எம்பி தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் ஒன்று எம்எல்ஏ தொகுதிக்கான அறையிலும், எம்எல்ஏ தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் எம்பி தொகுதிக்கான அறையிலும் மாற்றி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அலுவலர்கள் கவனக்குறைவால் இது நடந்ததாக தேர்தல் அதிகாரிகள் கூறினர்.இதுதொடர்பாக வேட்பாளர்கள், கட்சியினரிடம் அதிகாரி பேச்சுவார்த்தை நடத்தியதால் அவர்கள் சமாதானமடைந்தனர். இதையடுத்து எம்பி தொகுதியிலிருந்த இயந்திரமும், எம்எல்ஏ தொகுதியிலிருந்து இயந்திரமும் தனியாக வைக்கப்பட்டது. அதன்பின்னர் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்தது.தனியாக வைக்கப்பட்டுள்ள இயந்திரங்கள் கடைசியாக எண்ணப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் வாக்கு எண்ணிக்கை அரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.

Tags : Thiruvarur Voting Census Center ,
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு