×

புதுக்கோட்டையில் மன்னர் நீராடிய குளத்தில் படித்துறை உடைந்து சேதம் சீரமைத்து பராமரிக்க கோரிக்கை

புதுக்கோட்டை, மே 24: புதுக்கோட்டையில் மன்னர் குளித்த குளக்கரை படிக்கட்டுகள் உடைந்து கிடப்பதால் அதனை சீரமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை நகரம் மன்னர் காலத்தில் நன்கு வடிவமைக்கப்பட்ட நகரம் ஆகும். புதுக்கோட்டை நகரில் பல்வேறு பழமையான குளங்கள் உள்ளது. இதில் புதுக்கோட்டை போஸ் நகர் பகுதியில் உள்ள ராஜா குளமும் ஒன்று. இந்த குளத்தை மன்னர் காலத்தில் மன்னர் குளிக்க பயன்படுத்திய குளம் என கூறப்படுகிறது. இந்த குளத்தை சுற்றி ஆங்காங்கே படித்துறைகள் அமைக்கப்பட்டு இருந்தன.

மன்னர் காலத்திற்கு பிறகு இந்த குளத்தில் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் குளித்து வந்தனர். தற்போது இந்த குளத்தில் உள்ள படித்துறைகளில் உள்ள படிகள் அனைத்தும் முற்றிலும் சேதமடைந்து, குளத்தின் உள்ளே கருவேல மரங்கள் வளர்ந்தும் உள்ளது. மேலும் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் குப்பைகளை இந்த குளத்தில் கொட்டி வருகின்றனர். இதனால் குளத்து நீர்  தூர்நாற்றம் வீசி வருகிது. இதனால் ராஜா குளத்தில் தண்ணீர் இருந்தும், அதை அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.மேலும் இந்த குளத்தில் அதிக அளவில் பாசி படர்ந்து உள்ளது. தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி அந்த பகுதியில் உள்ள பொதுமக்களை கடிப்பதால், அவர்களுக்கு தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மன்னர் குளித்த குளத்தில் உள்ள படிகளை சீரமைத்து, குளத்தில் உள்ள கருவேல மரங்களை அகற்றி, தண்ணீரை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.



Tags : Pudukkottai ,king ,pond ,
× RELATED மோசடி வழக்கில் தலைமறைவான...