×

சுற்று வட்டாரங்களில் இருந்து கீரனூருக்கு கூடுதல் பேருந்து வசதி கிராமப்புற மக்கள் கோரிக்கை

புதுக்கோட்டை, மே 24: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியை சுற்றியுள்ள வழித்தடங்களில் 25 ஆண்டுகளுக்கு முன்பு இயக்கிய பேருந்துகள் மட்டுமே தற்போது இயங்குவதால் அந்த வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க  வேண்டும் என்று பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி-புதுக்கோட்டையின் மையப்பகுதியில் கீரனூர் உள்ளது. இங்கிருத்து அதனை சுற்றியுள்ள அனைத்து ஊர்களுக்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நகர பேருந்துகளை இயக்கி வருகின்றது. கே 1 பேருந்துகள் கீரனூரில் இருந்து களம்மாவூர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், மாத்தூர், ஏர்போர்ட் ஆகிய வழித்தடங்களில் திருச்சி வரை இயக்கப்படுகிறது.   கே2 பேருந்து கீரனூரில் இருந்து லெட்சுமணன்பட்டி வழியாக  திருவரம்பூர் வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.கே3 கீரனூரில் இருந்து  தென்னந்திரையன்பட்டி, புலியூர் ஆகிய கிராமங்கள் வழியாக  கிள்ளுக்கோட்டை வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. கே4 கீரனூர் உப்பிலியக்குடி வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.

கே.5 கீரனூரில் இருந்து ராப்பூல் வழியாக இலுப்பூர் வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. கே.6 கீரனூரில் இருந்து கந்தர்வகோட்டை வழித்தடத்திலும், கே7 கீரனூரில் இருந்து விராலிமலை வழித்தடத்திலும், கே8 கீரனூரில் இருந்து கீழையூர் வழித்தடத்திலும், கே9 கீரனூரில் இருந்து பாக்குடி வழியாக இலுப்பூர்  வழித்தடத்திலும், கே10 கீரனூரில் இருந்து வென்னமுத்துபட்டி வழித்தடத்திலும், கே11 கீரனூர் செங்கிப்பட்டி வழித்தடத்திலும், கே12 கீரனூரில் இருந்து உறவிக்காடு வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.கீரனூரில் இருந்து இயக்கப்படும் நகர பேருந்துகள் பல்வேறு கிராமங்கள் வழியாக சென்று  அருகில் உள்ள பல்வேறு மாவட்டங்களை இணைக்கும் வகையில் உள்ளது. இந்த பேருந்துகள் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இயக்கப்படுகிறது.அப்போது ஒரு சில பேருந்து நிறுத்தங்களை தவிர மற்ற பேருந்து நிறுத்தங்களில் பயணிகள் ஏறுவதில்லை. ஏனென்றால் அப்போது பேருந்து பயணிகளின் வருகை குறைவாக இருந்தது. குறிப்பாக கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கிராமங்களில் இருந்து நகர் பகுதிக்கு படிக்க வரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை குறைந்த அளவிலே இருந்தது.

தற்போது அதிகம் பேர் நகர் பகுதியில் உள்ள  பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்வதற்கு நகர பேருந்துகளை தேர்வு செய்து பயணிக்கின்றனர். இதனால் கீரனூரில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இதனால் அந்த  அனைத்து பகுதிகளுக்கு கீரனூரில் இருந்து கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வழித்தடத்தில்  100 பேர்களின் நலனுக்காக விடப்பட்ட ஒரு பேருந்தில் தற்போது ஆயிரம் பயணிகள் பேருந்தில் பயணித்து வருகின்றனர். இதனை தவிர்க்க போக்குவரத்து கழகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் விரைந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது குறித்து பயணிகள் கூறியதாவது:கிராமத்தில் இருந்து தற்போது தவிர்க்கமுடியாமல் ஏதோ ஒரு பணி நிமித்தமாக நகர் பகுதிக்கு வரவேண்டியுள்ளது. குறிப்பாக திருச்சி-புதுக்கோட்டையின் மையப்பகுதியில் கீரனூர் உள்ளதால் அதிகம் பேர் கீரனூரில் வந்து செல்வதையே முதலில் தேர்வு செய்கின்றனர். இதனால் கிராமங்களில் இருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.பயணிகளின் எண்ணிக்கைக்கேற்ப ஒரு வழித்தடத்திலும் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கவிலை. இதனால் வேலை நாட்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் வருகை அதிகரிப்பதால் அனைத்து நகர பேருந்துகளிலும் படிக்கட்டில் நின்று கொண்டு ஆபத்தான பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.எனவே தமிழ்நாடு போக்குவரத்து கழகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் விரைந்து தகுந்த நடவடிக்கை எடுத்து அனைத்து வழித்தடங்களிலும் புதிய பேருந்துகள் இயக்க தகந்த  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Tags : population ,areas ,
× RELATED கரும்பு விவசாயத்திற்கு பெயர்போன...