திருப்பூரில் இந்திய கம்யூ., வேட்பாளர் சுப்பராயன் 93,368 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

திருப்பூர்,மே24: திருப்பூர் மக்கவைத் தொகுதியில் 72.92 சதவீத வாக்குகள் பதிவானது. 15 லட்சத்து 29 ஆயிரத்து 836 வாக்காளர்களில், 11 லட்சத்து, 15 ஆயிரத்து 793 வாக்காளர்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். இது தவிர 4,400 தபால் ஓட்டுகள் பதிவானது. பதிவான வாக்குகள் அனைத்தும் திருப்பூர் எல்.ஆர்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் நேற்று எண்ணப்பட்டன. சட்டமன்ற தொகுதிகள் வாரியாக தனித்தனியாக 6 அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடந்தது. மொத்தம் 26 சுற்றுக்களாக வாக்கு எண்ணிக்கை நடந்தது. வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு துவங்கியது. மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான பழனிசாமி வாக்கு எண்ணிக்கையை துவக்கினார்.

தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடந்தது. காலை 9 மணி முதல் முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டன. முதல் சுற்று முதலே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் முன்னிலையில் இருந்தார். 26 சுற்றுக்களும் முன்னிலையில் இருந்த அவர், 2,932 தபால் ஓட்டுக்களை சேர்த்து மொத்தம் 5,08,725 வாக்குகள் பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் 4,15,357 வாக்குகள் பெற்றார். ஆனந்தனை விட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் 93,368 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். 3வது இடத்தை மக்கள் நீதி மய்யம் பிடித்தது.

மொத்தம் 64,657 வாக்குகளை ம.நீ.ம., வேட்பாளர் சந்திரகுமார் பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக அ.ம.மு.க., வேட்பாளர் செல்வம் 43,816 வாக்குகளை பெற்று 4வது இடத்தையும், 42,189 வாக்குகளை பெற்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகநாதன் 5வது இடத்தையும் பெற்றனர். தேர்தல் முடிவுகள் முறைப்படி இரவு 8 மணிக்கு அறிவிக்கப்பட்டது. மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனிசாமி, தேர்தல் முடிவுகளை அறிவித்தார். இதன் பின்சுப்பராயனுக்கு தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

Related Stories: