திருப்பூர் மக்களவை தொகுதியில் பலத்த பாதுகாப்புடன் நடந்த வாக்கு எண்ணிக்கை

திருப்பூர்,மே24:திருப்பூரில் பலத்த போலீஸ் பாதுக்கப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. திருப்பூர் மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையமான பல்லடம் ரோடு எல்.ஆர்.ஜி மகளிர் கலைகல்லூரியில் நேற்று கல்லூரி வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாநகர போலீஸ் உதவி கமிஷ்னர் ரமேஷ் கிருஷ்ணன், நவீன் குமார் ஆகியோர் தலைமையில் 4 இன்ஸ்பெக்டர்கள், 8 சப் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு பணியை மாநரக போலீஸ் கமிஷ்னர் சஞ்சய் குமார், துணை கமிஷ்னர் உமா ஆகியோர் பார்வையிட்டனர். மேலும் 500க்கும் மேற்பட்ட போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க மாநகர போலீசார் ரோந்து வாகனங்கள் மூலம் கட்சி அலுவலகங்கள் இருக்கும் இடங்கள் நகரின் முக்கியமான பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டனர். மேலும் அனைத்து சோதனை சாவடிகளிலும் வாகன தணிக்கை ஈடுபட்டனர்.

வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் செல்லும் வேட்பாளர்கள் மற்றும் வாக்கு சாவடி முகவர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களையும் வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் மாநகர போலீஸ் சார்பில் அமைக்கப்பட்டிருந்த மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் முழுமையாக சோதனை செய்த பின்னரே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதித்தனர்.

பஸ் நிறுத்தம் தற்காலிக மாற்றம்;

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் அருகில் வாக்கு எண்ணிக்கை மையமான எல்.ஆர்.ஜி மகளிர் கலைக்கல்லூரி இருப்பதால் அசம்பாவிதங்களை தடுக்க மாவட்ட கலெக்டர் அலுவலக பஸ் நிறுத்தம் 500 மீட்டர் தள்ளி தற்காலிகமாக மாற்றினர். இதனால் பயணிகள் அனைவரும் சுமார் அரை கிலோ மீட்டர் நடந்து சென்று பஸ் ஏறும் நிலை ஏற்பட்டது.

Related Stories: