×

சிதம்பரம் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் திருமாவளவன் வெற்றி

அரியலூர், மே 24: சிதம்பரம் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியின் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவன் 4,97,211 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சிதம்பரம் மக்களவை தொகுதி சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், ஜெயங்கொண்டம், அரியலூர், குன்னம் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியது. இத்தொகுதியின் மொத்த வாக்குகள் 14,79,108 ஆகும்.பதிவானவை 11,49,538 வாக்குகள். இத்தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அதிமுக சார்பில் சந்திரசேகர், அமமுக சார்பில் இளவரசன், நாம் தமிழர் கட்சி சார்பில் சிவஜோதி, மக்கள்நீதிமய்யம் சார்பில் ரவி உள்பட 13 பேர் போட்டியிட்டனர்.

சிதம்பரம் மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை அரியலூர் தத்தனூரில் உள்ள மீனாட்சி ராமசாமி பொறியியல் கல்லூரியில் நேற்று காலை 8 மணிக்கு பரபரப்புடன் துவங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் திருமாவளவன் 1828ம், அதிமுக சந்திரசேகர் 1578 வாக்குகளும் பெற்றிருந்தனர். அடுத்ததாக மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.இதில் முதற் சுற்றில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரசேகரனைவிட 1053 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தார். இந்நிலையில், அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் 2,091 வாக்குகள் பெற்று இரண்டாவது சுற்றிலிருந்து தொடர்ந்து 9 சுற்றிலும் அதிமுக வேட்பாளர் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார். அதனைத் தொடர்ந்து திருமாவளவன் 10 ஆவது சுற்று முடிவில் 2,262 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் வகித்தார். 19 வது சுற்றில் திருமாவளவன் 17,082 வாக்குகள் பெற்றிருந்தார். 23வது சுற்று முடிவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 4,97,211 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் 4,94,527 வாக்குகள் பெற்றுள்ளார்.


Tags : DMK ,alliance candidate ,Chidambaram Lok Sabha ,Thirumavalavan ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி