தாம்பரம் நகராட்சியில் துப்புரவு பணி சுணக்கம் குப்பை தேங்கி சுகாதார சீர்கேடு

தாம்பரம்: தாம்பரம் நகராட்சி பகுதிகளில் துப்புரவு பணிகள் சரிவர நடைபெறாததால், ஆங்காங்கே குப்பைகள் தேங்கியுள்ளது. இதனால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. தாம்பரம் நகராட்சியில் மொத்தம் 39 வார்டுகள் உள்ளன. இங்கு, ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் துப்புரவு ஊழியர்கள் சரிவர குப்பை கழிவுகளை அகற்றுவது இல்லை. குறிப்பாக, 20வது வார்டு பகுதியில் ஆங்காங்கே குப்பை குவியலாக காட்சியளிக்கிறது. மேலும், பொதுமக்கள் குப்பை கொட்டுவதற்கு தொட்டிகள் இல்லாததால், குப்பை கழிவுகளை சாலை ஓரமும், சாலை ஓரம் உள்ள காலி இடங்களிலும் கொட்டும் நிலை உள்ளது.

கிழக்கு தாம்பரம், பொன்னியம்மன் கோயில் தெருவில் சாலையோரம் உள்ள காலி இடங்களில் அதிகப்படியான குப்பைகள் குவிந்துள்ளதுடன், சாலையிலும் பரவியும் உள்ளது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது.

இதனால், பொதுமக்களுக்கு மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை, என கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட 20வது வார்டு, பொன்னியம்மன் கோயில் தெரு மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் உள்ள குப்பை கழிவுகளை நகராட்சி ஊழியர்கள் சரிவர அகற்றுவது இல்லை. இதனால் பல பகுதிகளில் குப்பை கழிவுகள் குவிந்து துர்நாற்றம் வீசுவதால், பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறோம். இதே நிலை நீடித்தால், நோய் பாதிப்பு அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, நகராட்சி பகுதிகளில் உள்ள குப்பைகளை தினமும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: