×

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை

பொள்ளாச்சி, மே 24: பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் பொள்ளாச்சி, வால்பாறை(தனி), மடத்துக்குளம், உடுமலை, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மொத்தமுள்ள 1691 வாக்குச்சாவடிகளில், கடந்த ஏப்ரல் மாதம் 18ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், அனைத்து வாக்குச்சாவடிகளில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக தனித்தனி அறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

வாக்கு எண்ணிக்கை நடந்த மையமான மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில்,  துணை ராணுவத்தினர், தமிழ்நாடு சிறப்பு படையினர், உள்ளூர் போலீசார் என பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். அடையாள அட்டை வைத்திருந்தவர்கள் மட்டும் வாக்கு எண்ணும் மைய பகுதிக்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். கண்காணிப்பை பலப்படுத்த போலீஸ் பாதுகாப்பு மட்டுமின்றி, சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டிருந்தது.

மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு துவங்கியது. அப்போது, தனி அறையில் வைக்கப்பட்டிருந்த தபால் ஓட்டுக்கள் பிரிக்கப்பட்டு வேட்பாளர் சின்னம் அடங்கிய அடங்கிய தனித்தனி பாக்சில் போடப்பட்டது. முன்னதாக, பொள்ளாச்சி மக்களவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட வருவாய் அலுவலருமான ராமதுரைமுருகன்,  துணை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் முவர்களின் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு வைக்கப்பட்டிருந்த அறை திறக்கப்பட்டது.

அறையில் இருந்த சீல் அகற்றப்பட்டு, அங்கிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. காலை 8.15 மணியளவில் முதல் சுற்று துவங்கியது. ஆனால் முதல்சுற்று நிலவரம் வெளியிட காலதாமதம் ஆனது. இதையடுத்து அதிகாரிகளை கண்டித்து, பத்திரிகையாளர்கள் பலர், வாக்கு எண்ணும் மைய வளாகத்தின் ஒரு பகுதியில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதையறிந்த டிஎஸ்பி., சிவக்குமார் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சிலர் சம்பவ இடத்துக்கு விரைந்து, பத்திரிகையாளர்களை சமாதானம் செய்து, விரைந்து தகவல் கொடுப்பதற்கான ஏற்படு செய்யப்படும் என உறுதி அளித்தனர். அதன் பிறகே, தர்ணாவில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்தனர்.   இச்சம்பவத்தால், வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, அதிகார பூர்வமாக 10 மணிக்கு முதல் சுற்று நிலவரம் அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு சுற்றின் முடிவின்போதும், வேட்பாளர்களுக்கு கிடைத்த வாக்குகள் விவரம் குறித்து கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு, இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மக்களவை தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற அறைகளில் வெப்கேமரா கொண்டு கண்காணிக்கப்பட்டது.  

வாக்கு எண்ணிக்கை மையத்தில் வெளியே நின்ற வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள், எந்த வேட்பாளர் எத்தனை வாக்குகள் வாங்கியுள்ளனர், என்பது குறித்து தெரிந்து கொள்ளும் வகையில், ஆங்காங்கே ஒலிபெருக்கி அமைக்கப்பட்டிருந்தது. இதில், திமுக வேட்பாளர் சண்முகசுந்தரம் தொடர்ந்து முன்னிலை பெற்று வந்த நிலையில், அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சியினர் பலர், வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற இடத்திலிருந்து வெளியேறினர்.

Tags : Lok Sabha ,
× RELATED மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல்...