கோவை தொகுதியில் 6 முறை களம் கண்ட பா.ஜ.க., 4வது முறையாக தோல்வி

கோவை, ேம 24: கோவை மக்களவை தொகுதியில் ஆறு முறை களம் கண்ட பாரதிய ஜனதா நான்காவது முறையாக தோல்வி அடைந்தது.

கோவை மக்களவை தொகுதியில், அதிமுக கூட்டணியில், பா.ஜ சார்பில் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். இவர், கடந்த 1998ம் ஆண்டு கோவை மக்களவை தொகுதியில் முதல்முறையாக போட்டியிட்டு 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்றார். அப்போது, கோவை குண்டுவெடிப்பு நடந்த காலக்கட்டம் என்பதால், தமிழகத்திலேயே மிக அதிகமான வாக்கு வித்தியாசத்தில் ெவன்று, முதல்முறையாக பாராளுமன்றம் சென்றார். மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ ஆட்சி ஓராண்டில் கலைந்தது. இதன்பிறகு 1999ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், இவர், கோவை தொகுதியில் 2வது முறையாக போட்டியிட்டு, ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ெவன்றார்.

இதன்பிறகு, 2004ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.-அதிமுக அணி சார்பில் இதே தொகுதியில் 3வது முறையாக களம் இறங்கினார். இத்தேர்தலில், அப்போதைய திமுக கூட்டணி வேட்பாளர் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்பராயனிடம் தோல்வி அடைந்தார். இத்தேர்தலில், திமுக அணி, தமிழகம்-புதுவையில் 40 தொகுதியிலும் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து, 2009ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்ைல. இவருக்கு பதிலாக, கோவை மண்டல பா.ஜ செயலாளர் ஜி.கே.எஸ்.செல்வகுமார் போட்டியிட்டார். இத்தேர்தலில், ஜி.கே.எஸ்.செல்வகுமாரும் தோல்வியை தழுவினார். அதிமுக அணி சார்பில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வெற்றிபெற்றார்.

2014ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு நான்காவது முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டது. இத்தேர்தலில், 42 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் நாகராஜனிடம் தோல்வி அடைந்தார். தற்போது நடைபெற்ற 2019 மக்களவை தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் ஐந்தாவது முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டது. இத்தேர்தலில், வலுவான திமுக அணி சார்பில் போட்டியிட்ட மார்க்ஸ்சிட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனுக்கும், அதிமுக கூட்டணி சார்பில் களம் இறங்கிய சி.பி.ராதாகிருஷ்ணனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

இதில், பி.ஆர்.நடராஜன் 5,70,514 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். சி.பி.ராதாகிருஷ்ணன் 3,91,505 வாக்குள் மட்டுமே பெற்றார். வாக்கு வித்தியாசம் 1,79,009. இதன்மூலம், கோவை தொகுதியில் சி.பி.ராதாகிருஷ்ணன் மூன்றாவது முறையாக தோல்வி அடைந்தார். இத்தொகுதியில், இதுவரை 6 முறை களம் கண்ட பாரதிய ஜனதா, கடந்த 1998, 1999 தவிர மீதமுள்ள நான்கு முறையும் தோல்வி அடைந்துள்ளது.

Related Stories: