திமுக எம்எல்ஏக்களின் பலம் 3 ஆக உயர்ந்தது

புதுச்சேரி, மே 24:  தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்றதன் மூலம் புதுவை சட்டசபையில் அக்கட்சி எம்எல்ஏக்களின் பலம் 3 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்து இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டசபை 30 தொகுதிகளை உள்ளடக்கியது. இதில் ஆளுங்கட்சியான காங்கிரஸ் 15, கூட்டணி கட்சியான திமுக 2 உறுப்பினர்களை பெற்றுள்ளது. மாகே சுயேட்சை வேட்பாளர் ராமகிருஷ்ணன் ஆட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளார். இதுதவிர எதிர்க்கட்சி வரிசையில் ரங்கசாமியின் என்ஆர் காங்கிரஸ் 8 தொகுதிகளை பெற்றிருந்தது. அதிமுக 4 உறுப்பினர்களையும் பெற்றுள்ளது. இதுதவிர மத்திய உள்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட பாஜகவைச் சேர்ந்த 3 நியமன எம்எல்ஏக்களும் உள்ளனர்.

இந்த நிலையில் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக, சபாநாயகர்  வைத்திலிங்கத்தை அக்கட்சி தலைமை அறிவித்தது. இதையடுத்து தனது சபாநாயகர் பதவியை ராஜினமா செய்தார். தற்போது மக்களவை தேர்தலில் வைத்திலிங்கம் வெற்றி பெற்றுள்ளார்.இதையடுத்து அவர் தனது எம்பி பதவி அல்லது காமராஜர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பதவி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். காங்கிரசுக்கு மத்தியில் குறைவான எம்பிக்களே இருப்பதால் வைத்திலிங்கம் தனது எம்எல்ஏ பதவியை விரைவில் ராஜினாமா செய்வார் என்று தெரிகிறது.இதன்மூலம் புதுச்சேரி சட்டசபையில் ஆளுங்கட்சியின் பலம் 14 ஆக குறையும். அதேசமயம் தற்போது இந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெங்கடேசன் வெற்றிபெற்றதன் மூலம் காங்கிரஸ்- திமுக கூட்டணி பலம் சுயேட்சை ஆதரவின்றி 17 ஆக உயர்ந்துள்ளது. (வைத்திலிங்கம் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யும் பட்சத்தில்தான் காங்., திமுக கூட்டணி பலம் 17 என்பது குறிப்பிடத்தக்கது). மொத்தத்தில் தற்போது புதுவை சட்டசபையில்  திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

 திமுக வேட்பாளர் வெங்கடேசன் வெற்றி பெற்றதன் மூலம், காமராஜர் நகர் தொகுதி எம்எல்ஏ பதவியை வைத்திலிங்கம் ராஜினாமா செய்தாலும் ஆட்சிக்கு ஆபத்து இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் இந்த தொகுதியில் காங்கிரஸ் 9,991 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தது. எனவே இடைத்தேர்தல் நடந்தாலும் அங்கு அக்கட்சியே மீண்டும் வெற்றிபெறும் நிலை உள்ளதால் புதுவையில் காங்கிரசின் கை  ஓங்கியுள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Related Stories: