தட்டாஞ்சாவடி வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் காலதாமதம்

புதுச்சேரி, மே 24: தட்டாஞ்சாவடி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது இயந்திரத்தில் சீல் இல்லாததால் அரை மணி நேரம் தாமதமாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.  புதுவை மக்களவை தொகுதியுடன் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெங்கடேசன், என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் நெடுஞ்செழியன், நாம் தமிழர் கட்சி கவுரி, புதுச்சேரி வளர்ச்சிக்கட்சி ரவிசங்கர், தமிழக வாழ்வுரிமை கட்சி தர், அமமுக முருகசாமி, சுயேட்சைகள் மண்ணாதன், தமிழ்மல்லன் ஆகிய 8 பேர் போட்டியிட்டனர். இந்த இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை லாஸ்பேட்டை மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று எண்ணப்பட்டன.

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கைக்காக 12 டேபிள்களிலும் 12 பூத் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்து வரப்பட்டன. அப்போது 9/2 சுப்பையாநகர் வாக்குச்சாவடியில் பதிவான வாக்கு இயந்திரத்தில் 3 சீல்களுக்கு பதிலாக ஒரு சீல் மட்டுமே இருந்தது. மேலும், அதனுடன் இணைக்கப்பட்ட சீட்டில் வாக்குச்சாவடி அதிகாரியின் கையெழுத்தும், முகவர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரியின் கையெழுத்து மாதிரியும் வேறுபட்டு இருந்தது. அதேபோல், 9/5 விவிபி நகர் வாக்குச்வாசாவடியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான மொத்த வாக்கு ஒப்புகை சீட்டில் 874 என்றும், முகவர் கையில் கொடுக்கப்பட்ட ஒப்புகை சீட்டில் 844 என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை இந்திய கம்யூ., முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச் சென்றனர். இதனால் வாக்குகளை எண்ணுவதில் குழப்பம் ஏற்பட்டது. இதுபற்றி தலைமை தேர்தல் அதிகாரியை தொடர்பு கொண்டு அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த 2 பூத் வாக்கு இயந்திரங்களையும் தனியாக வைத்து விட்டு, மற்ற இயந்திரங்களை எண்ண உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, மற்ற வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.இந்த குழப்பத்தால் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலுக்கான தபால் வாக்குகள் எண்ணும்பணி அரை மணி நேரம் தாமதமாக காலை 8.30 மணிக்கு தொடங்கியது.

Related Stories: