×

வரத்து குறைவால் கோவில்பட்டி மார்க்கெட்டில் எலுமிச்சை விலை கிடுகிடு உயர்வு கிலோ ரூ.130க்கு விற்பனை

கோவில்பட்டி, மே 24: கோவில்பட்டி மார்க்கெட்டிற்கு எலுமிச்சை பழங்களின் வரத்து குறைவால் கிடுகிடுவென விலை உயர்ந்துள்ளது. கடும் கோடை வெயிலால் விளைச்சல் குறைந்துள்ளதால் எலுமிச்சை பழங்கள் பயிரிட்ட விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கோவில்பட்டி மார்க்கெட்டிற்கு கழுகுமலை, வானரமுட்டி, சங்கரன்கோவில், கள்ளிகுளம், குருவிகுளம், பிள்ளையார்நத்தம், தேவர்குளம், இளையரசனேந்தல், சிப்பிப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்த எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு வருகின்றன. இப்பகுதியில் பருவமழை பொய்த்தததால் கிணற்று பாசனம் மூலம் எலுமிச்சை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. மழையின்மை, கிணறுகளில் தண்ணீர் பற்றாக்குறை போன்றவற்றால் எலுமிச்சை விளைச்சல் குறைந்துவிட்டது. கடும் வெயிலின் தாக்கத்தினால் எலுமிச்சை காய் மற்றும் பழங்கள் வெம்பி விடுகிறது. இதனால் மரங்களில் இருந்து எலுமிச்சை பழங்களை பறிக்க முடியாததால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
வரத்து குறைவால் கோவில்பட்டி மார்க்கெட்டில் எலுமிச்சை விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தற்போது கோடை கால சீசன் என்பதால் எலுமிச்சை பழங்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனாலும் விலை உயர்ந்து விட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தரம் வாரியாக கிலோ ரூ.40 முதல் 70 வரை விற்கப்பட்ட எலுமிச்சை பழங்கள் வரத்து குறைவால் தற்போது முதல் தரம் கிலோ ரூ.130க்கும், 2வது தரம் ரூ.100க்கும் விற்கப்படுகிறது. கோடை காலம் என்பதால் பொதுமக்கள் விலையை பொருட்படுத்தாமல் எலுமிச்சை பழங்களை வாங்கி செல்கின்றனர். விலை அதிகரித்துள்ளதால் விற்பனையும் குறைந்துள்ளது. விலை உயர்ந்தாலும் போதிய விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Kovilpatti ,
× RELATED நத்தம் கோவில்பட்டியில் பகவதி அம்மன் கோயில் திருவிழா