விளாத்திகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட மார்க்கண்டேயன் 27,456 வாக்குகளை பெற்றார்

தூத்துக்குடி, மே 24:  விளாத்திகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட மார்க்கண்டேயன் 27,456 வாக்குகளை பெற்றார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது: விளாத்திகுளம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட எனக்கு டெபாசிட் தொகையை திரும்ப பெறும் அளவுக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். அதுவே மகிழ்ச்சி. இதற்காக நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தேர்தல் களத்தை பொறுத்தவரை அதிமுக 22 சட்டமன்ற இடைத்தேர்தலை சந்திப்பதற்கு மட்டும் சுமார் 2,200 கோடி பணத்தை செலவு செய்துள்ளனர். ஒரு தொகுதிக்கு வாக்காளருக்கு மட்டும் ரூ.2 ஆயிரம் கொடுத்துள்ளனர். இதில் பல்வேறு இடங்களில் அவர்கள் வெற்றி வாய்பை இழந்துள்ளனர். ஆளுகிற கட்சியை எதிர்த்து யார் நின்றாலும் முன் வைப்பு தொகை கிடைக்காது என்ற சூழ்நிலையில் இந்த மக்கள் முன் வைப்பு தொகையை வழங்கியிருப்பது, விளாத்திகுளம் தொகுதி மக்கள் ரூ.2 ஆயிரத்தை வென்று காட்டியுள்ளனர் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இந்த தேர்தல் ஒரு மிகப்பெரிய ஒரு ஜனநாயக புரட்சி.

தேனி தொகுதியில் தனது மகன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் சுமார் ரூ.400 கோடி வரை செலவு செய்துள்ளார். இது வரலாற்றில் மிகப்பெரிய ஒரு கொடுமை. ஒரு அரசியல்வாதி தேர்தலில் பணத்தை கையூட்டு கொடுப்பதற்காக ஒரு குற்றவாளி தேர்தல் ஆணையத்தால், உச்சநீதிமன்றத்தால், மக்கள் மன்றத்தால் தண்டிக்கப்பட வேண்டும் என்றால் அது பன்னீர் செல்வத்துக்கு தான் முதலில் கொடுக்க வேண்டும். இங்குள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து பன்னீர்செல்வத்துக்கான ஆபரேஷன் தொடங்கி விட்டது. இந்த தேர்தலில் ரூ.4 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளனர்.  ஊழலே செய்யாத மோடிக்கு மக்கள் மீண்டும் வாக்களித்துள்ளனர். கூட்டணி கட்சியாக அதிமுகவுடன் இணைந்திருந்தாலும் கூட மோடி, இவர்கள் அனைவரையும் டெல்லி சிறையில் அடைப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: