நீலகிரி தொகுதியில் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடு தயார்

ஊட்டி, மே 23:  நீலகிரி மக்களவை தொகுதியில் ஊட்டி, குன்னூர், கூடலூர், பவானிசாகர், மேட்டுப்பாளையம், அவிநாசி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. நீலகிரி தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 6 லட்சத்து 65 ஆயிரத்து 337 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 202 பெண் வாக்காளர்களும், 69 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 13 லட்சத்து 65 ஆயிரத்து 608 பேர் இடம் பெற்றிருந்தனர்.  17வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 18ம் தேதி நடந்தது.

இதற்காக 1610 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. நீலகிரி தொகுதியில் இறுதி நிலவரப்படி பவானிசாகர் தொகுதியில் 1 லட்சத்து 96 ஆயிரத்து 899 வாக்குகளும், ஊட்டி தொகுதியில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 760 வாக்குகளும், கூடலூர் தொகுதியில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 215 வாக்குகளும், குன்னூர் தொகுதியில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 549 வாக்குகளும், மேட்டுப்பாளையம் தொகுதியில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 734 வாக்குகளும், அவினாசி தொகுதியில் 1 லட்சத்து 99 ஆயிரத்து 105 வாக்குகள் என மொத்தம் 10 லட்சத்து 06 ஆயிரத்து 262 வாக்குகள் பதிவாகியிருந்தது. நீலகிரி தொகுதியில் 73.7 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய தொகுதிகள் மற்றும் சமவெளி பகுதிகளில் உள்ள மேட்டுபாளையம், அவினாசி, பவானிசாகர் ஆகிய தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குபதிவு இயந்திரங்கள், வி.வி.பேட்., கட்டுபாட்டு இயந்திரங்கள் ஆகியவை வாக்கு எண்ணிக்கை மையமான ஊட்டியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு சட்டமன்ற தொகுதிகள் வாரியாக 6 அறைகளில் வைத்து சீல் வைக்கப்பட்டது. கல்லூரியை சுற்றிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ளது.

 நீலகிரி தொகுதியில் இதற்கான பல்வேறு முன்னேற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நீலகிரி தொகுதியில் பதிவான வாக்குகள் மொத்தம் 23 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளன. மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மற்றும் அதிகாரிகள் நேற்று ஊட்டி பாலிடெக்னிக் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டனர். இது குறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், ’நீலகிரி மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மக்களவை தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு, 6 அரங்குகளில் 14 மேசைகள் அமைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட உள்ளது.

பவானிசாகர் தொகுதி 294 வாக்குச்சாவடிகளுக்கு 21 சுற்றுகளாகவும், ஊட்டி தொகுதி 239 வாக்குச்சாவடிகளுக்கு 18 சுற்றுகளாகவும், கூடலூர் 221 வாக்குசாவடிகள், குன்னூர் 223 வாக்குச்சாவடிகள் தொகுதிகளுக்கு 16 சுற்றுகளாகவும், மேட்டுப்பாளையம் 321 வாக்குசாவடிகள், அவிநாசி 312 வாக்குச்சாவடிகள் ஆகிய தொகுதிகளுக்கு தலா 23 சுற்றுகளாகவும் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கையின் முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். ஒட்டுமொத்தமாக நீலகிரி தொகுதியில் 23 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட உள்ளது. வாக்கு எண்ணிக்கை பணிகளில் சுமார் 500 அரசு ஊழியர்கள் ஈடுபட உள்ளனர், என்றார்.

Related Stories: