காமராஜ் சாகர் அணை பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளால் விலங்குகளுக்கு ஆபத்து

ஊட்டி  மே 23: சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் பகுதிகளில் போதிய குப்பைத்  தொட்டிகள் வைக்கப்படாத நிலையில், சுற்றுலா பயணிகள், பிளாஸ்டிக் குப்பைகள்  வனங்களில் வீசிச் செல்வதால் விலங்குகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஊட்டிக்கு  ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில்  ஓட்டல் மற்றும் உணவு விடுதிகளில் சென்று உணவு சாப்பிடுவதை தவிர்க்கின்றனர்.  பெரும்பாலானவர்கள் வாகனங்களில் வரும் நிலையில், வரும் போதே உணவை சமைத்து  எடுத்து வருகின்றனர். சிலர், இங்கு வந்த பின் கிடைத்த இடங்களில் வாகனத்தை  நிறுத்தி உணவு சமைத்து சாப்பிடுகின்றனர். கேரள மாநிலம், கர்நாடகவில்  இருந்து வரும் சுற்றுலா பயணிகள் தலைகுந்தா பகுதியில் உள்ள வனங்கள் அல்லது  காமராஜ் அணைப் பகுதியில் வாகனங்களை நிறுத்தி சமையல் செய்து  சாப்பிடுகின்றனர்.

இவர்கள், சமைத்தோ அல்லது எடுத்து வந்த உணவை  சாப்பிட்டு முடித்த பின், எஞ்சிய உணவு கழிவுகள், பிளாஸ்டிக் பாட்டில்கள்,  தட்டுகள் மற்றும் பல்வேறு பொருட்களையும் வனங்களில் வீசிச் செல்கின்றனர்.  ஒரு சிலர் மதுபாட்டில்களையும் போட்டுவிட்டு செல்கின்றனர். குறிப்பாக,  தலைகுந்தா பகுதியில் எங்கு பார்த்தாலும் சாலையோரங்களில் மதுபாட்டில்களும்,  பிளாஸ்டிக் பாட்டிகளும் குவிந்து கிடக்கின்றன. இப்பகுதியில், வனத்துறை,  உள்ளாட்சி அமைப்புக்கள் குப்பைத் தொட்டி வைக்கவில்லை. இதனால், சுற்றுலா  பயணிகள் குப்பைகளை வனங்களில் வீசிச் செல்கின்றனர். விலங்குகளுக்கு  மட்டுமின்றி, கால்நடைகள் மற்றும் பொதுமக்களுக்கும் பல்வேறு ஆபத்து ஏற்படும்  அபாயம் உள்ளது.

 

எனவே, தலைகுந்தா மற்றும் காமராஜ் சாகர்  அணைப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்காமல் இருக்கவும், விலங்குகளை  காக்கவும் அப்பகுதியில் உள்ள வனங்களை ஒட்டிய பகுதிகளில் மற்றும்  சாலையோரங்களில் குப்பைத் தொட்டிகள் வைப்பது அவசியம். ேமலும், உடனடியாக  அப்பகுதியில் தன்னார்வ அமைப்புக்களை கொண்டு பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி  பாட்டில்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: