தேர்தலுக்கு வாங்கப்பட்ட வீல்சேர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க முடிவு

கோவை, மே. 23: கோவையில் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்களிக்க வசதிக்காக வாக்குப்பதிவு மையங்களில் வீல்சேர்கள் வசதி ஏற்படுத்தப்பட்டது. இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் 476 வீல்சேர்கள் புதியதாக வாங்கப்பட்டது. இந்நிலையில் தேர்லுக்கு பயன்படுத்தப்பட்ட வீல்சேர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த வீல்சேர்கள் கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து சமூகநலத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மக்களவை தேர்தலின் போது 467 சக்கர நாற்காலிகள் வாங்கப்பட்டது. இதனை மாவட்டம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வீல்சேர்கள் கேட்டு 200 பேர் விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மீதமுள்ள வீல்சேர்களை வழங்க அனைவருக்கும் கல்வி இயக்கத்திடமும், மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மையத்திலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக்கொள்ளப்பட்ட பின் தகுதியான விண்ணப்பத்தாரர்களை தேர்வு செய்து வீல்சேர்கள் வழங்கப்படும்,’’ என்றார்.

Related Stories: