பம்ப்செட் இலவச பரிசோதனை கூடம்

கோவை, மே 23:கோவையில் மோட்டார்--பம்ப்செட்டுகளை பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கும் விதமாக இலவச பரிசோதனை கூடம் அமைக்கப்பட வேண்டும் என்று தொழில்துறையினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.கோவை மாவட்டத்தில் மட்டும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மோட்டார்-பம்ப்செட் உற்பத்தியாளர்கள் உள்ளனர். பெரிய அளவிலான உற்பத்தியாளர்கள் மட்டுமின்றி சிறு, குறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களும் மோட்டார்-பம்ப்செட் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு உற்பத்தியாகும் உபகரணங்கள் இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. இந்த தொழிலில் 1.5 லட்சத்துக்–்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு நேரடியாகவும், இரண்டு லட்சத்திற்கு மேற்பட்டோர் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர்.

  மோட்டார் மற்றும் பம்ப்செட்டை உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களுக்கு ஐ.எஸ்.ஐ எனப்படும் தரச்சான்று வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாடலுக்கும் ஏற்ப வெவ்வேறு தனித்துவ எண்களால் இந்த தரச்சான்ற இந்திய தர நிர்ணய அமைவனம் (பி.ஐ.எஸ்) வழங்கி வருகிறது. தங்களது பொருட்களுக்கு ஐ.எஸ்.ஐ சான்றிதழ் பெற விரும்பும் உற்பத்தியாளர்கள், மோட்டார் அல்லது பம்ப்செட்டின் மாதிரியை பி.ஐ.எஸ் அலுவலகத்தில் வழங்கி, ஐ.எஸ்.ஐ சான்றிதழுக்காக விண்ணப்பிக்க வேண்டும். இதனைத்தொடர்ந்து, பி.ஐ.எஸ் அந்த மாதிரியை என்.ஏ.பி.எல் ஆய்வகத்திற்கு அனுப்பும்.

அங்கு, மின்சார உபயோகம், திறன், டெம்ப்ரேச்சர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை அம்சங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், தகுதி சான்றிதழ் வழங்கப்படும். அந்த சான்றிதழின் அடிப்படையில் தான் ஒரு பொருளுக்கு பி.ஐ.எஸ் சார்பில் ஐ.எஸ்.ஐ தரச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. கோவையில் எம்.எஸ்.எம்.இ அலுவலகம் மற்றும் ஆவராம்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனம் மட்டுமே மோட்டார், பம்ப்செட்டுக்கு தகுதி சான்றிதழ் வழங்கும் அந்தஸ்துடைய என்.ஏ.பி.எல் லேப் வசதியை பெற்றுள்ளன.  ஐ.எஸ்.ஐ தரச்சான்றிதழை பெற கட்டணம் அதிகமாக உள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து கோப்மா சங்கத்தின் தலைவர் மணிராஜ் கூறியதவாது:-

ஐ.எஸ்.ஐ சான்றுபெற விண்ணப்பிக்கவும், ஆண்டுதோறும் அந்த சான்றிதழை புதுப்பிக்கவும் சராசரியாக ரூ.40 ஆயிரம் வரை செலவாகிறது. மேலும், என்.ஏ.பி.எல் பரிசோதனை கூடத்தில் பொருளை பரிசோதனை செய்ய 5 முதல் 6 ஆயிரம் வரை செலவாகிறது. சிறு மற்றும் குறு உற்பத்தியாளர்களால் இந்த அளவுக்கு செலவு செய்ய இயலவில்லை. இதனால் ஐ.எஸ்.ஐ தரச்சான்று நாங்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு கிடைப்பதில்லை. நல்ல தரமான முறையில் மோட்டார்-பம்ப்செட்டுகள் உற்பத்தி செய்தாலும், ஐ.எஸ்.ஐ சான்றிதழ் இல்லாத பொருள் என்று எங்களது தயாரிப்புகளை மக்கள் புறக்கணிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

மோட்டார்-பம்ப்செட் துறையில் கோவையின் தயாரிப்புகள் இந்திய அளவில் மதிப்பு பெற்றவை. எனவே தரச்சான்றிதழை வழங்குவதை அரசு சேவையாக நினைக்க வேண்டும். மாறாக வருமானமாம் ஈட்டும் துறையாக பார்க்கக்கூடாது. தொழில் நலிவடைந்துள்ள சூழலில், ஐ.எஸ்.ஐ தரச்சான்று பெற வசூலிக்கும் கட்டணத்தை மத்திய அரசு 4ல் மூன்று பங்காக குறைக்க வேண்டும். அதோடு, தமிழக அரசின் சார்பில் எங்களுக்கு இலவச பொது  பரிசோதனை கூடம் அமைத்து கொடுக்க வேண்டும்.

அவ்வாறு இலவச பொது பரிசோதனை கூடம் ஏற்படுத்தப்பட்டால் ஐ.எஸ்.ஐ தரச்சான்று பெற ஆகும் கட்டணம் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. இதனால், சிறு குறு உற்பத்தியாளர்களும் தங்கள் தயாரிக்கும் பொருளுக்கு தரச்சான்றிதழ் பெற்று சந்தையில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை பிடிக்க முடியும். எனவே தமிழக அரசு எங்களது கோரிக்கையை ஏற்று கோவையில் இலவச பரிசோதனை கூடம் அமைத்து கொடுக்க முன்வர வேண்டும்.

Related Stories: