உரக் கிடங்கு அமைக்க எதிர்ப்பு அதிகாரிகளை மக்கள் முற்றுகை

ஈரோடு, மே 23:  ஈரோடு கருவில்பாறை வலசு பகுதியில் உர கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாநகராட்சிக்கு 3ம் மண்டலத்திற்கு உட்பட்ட 31வது வார்டு கருவில்பாறை வலசு பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். கருவில்பாறை வலசு பகுதியில் வில்லரசம்பட்டி, சாணார்பாளையம், சத்தியாநகர், காந்தி நகர், மொண்டிகாரன்பாளையம் உட்பட பல கிராமங்களுக்கு பொதுவான சுடுகாடு, இடுகாடு உள்ளது.

Advertising
Advertising

இந்த இடத்தில் மாநகராட்சி சார்பில் குப்பைகளை பிரித்து உரமாக்கும் கிடங்கு அமைக்க ரூ.40லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, நேற்று முன்தினம் கட்டுமான பணிகள் துவங்கப்பட்டது. இதையறிந்த அப்பகுதி மக்கள் உரக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பணி நடக்கும் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் நேற்று திரண்டனர். தகவல் அறிந்த மாநகராட்சி முதன்மை செயற்பொறியாளர் மதுரம், உதவி கமிஷனர்கள் விஜயா, அசோக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அங்கு திரண்டிருந்த மக்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகளிடம் மக்கள் கூறுகையில்,`நாங்கள் குடிநீர் வரி, குடியிருப்பு வரி, குப்பை வரி என ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டி வருகிறோம். ஆனால், எங்கள் பகுதியில் தெரு விளக்கு, சாக்கடை, சாலை வசதி ஏதுவும் இல்லை. முதலில் அடிப்படை வசதிகளை செய்து தர முன் வர வேண்டும். கருவில்பாறை வலசில் உரக்கிடங்கு அமைத்தால் நிலத்தடி நீர், காற்று மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடும்.

அதனால், வேறு இடத்தில் கிடங்கு அமைக்க வேண்டும்’ என்றனர். மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: உங்கள் பகுதியில் சேகரமாகும் குப்பைகளை பிரித்து, அதில் மக்கும் குப்பையை மட்டும் உரமாக்கி விவசாய பயன்பாட்டிற்கு வழங்குகிறோம். இது மாநகராட்சியின் திட்டம் இல்லை. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

ஈரோட்டில் 29 பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுவிட்டது. இந்த திட்டத்தினால் நிலத்தடி நீரோ, காற்றோ எதுவும் மாசுபடாது. சுடுகாடு, இடுகாடு இருக்கும் பகுதியை முழுவதுமாக நாங்கள் எடுத்துக்கொள்ளவில்லை.

அதில் இருந்து 6 ஆயிரம் சதுரஅடி மட்டும் தான் பயன்படுத்திக்கொள்கிறோம். எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு சுற்றுச்சுவர் அமைத்து தருகிறோம். அதன்பின் உங்கள் பகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளும் முறையாக செய்து தருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர். இதைகேட்டு சமாதானமான மக்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் உரக்கிடங்கு அமைக்கும் பணிகளை துவக்கினர்.

Related Stories: