பவானி ஆற்றில் தண்ணீர் எடுத்து விற்பனை

ஈரோடு, மே 23: பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து விற்பனை செய்யப்படுவதால் பாசன பகுதிகள் தண்ணீரின்றி பாலைவனமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்க தலைவர் நல்லசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் அளவு ஆண்டுதோறும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால், பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து கொண்டு போகிறது.

பவானி ஆற்றில் இருந்து பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய் பல்லடம் அடுத்துள்ள கேத்தனூர் வரை செல்கிறது. இது உடுமலைப்பேட்டை வரை நீட்டிக்க வாய்ப்பு உள்ளது. இந்த தண்ணீர் குடிநீர் தேவைக்கு மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக சாயப்பட்டறைகள், கோழிப்பண்ணைகள், சந்தனமரக்காடுகள், தென்னந்தோப்புகளுக்கும் லிட்டர் 7 பைசா என்ற விலையில் தனியார் நிறுவனம் ஒன்று குத்தகைக்கு எடுத்து தண்ணீரை விற்பனை செய்கிறது.

அமராவதி வடிநிலப்பகுதிகளுக்கும் இந்த தண்ணீர் கொண்டு செல்லும் சூழல் உருவாகி வருகிறது. இதனால், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பவானி பாசனங்கள் பாதிக்கப்படுவது அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் பவானி ஆற்று நீர் குடிநீர் மற்றும் தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். பாசன பகுதிகள் அனைத்தும் பாலைவனமாக மாறும் நிலை ஏற்படும். எனவே, நிலைமையை சமாளிக்க தமிழக அரசு பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 14 டிஎம்சி தண்ணீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.

Related Stories: