18 கோடியில் அமைக்கப்பட்ட நிலையத்தில் 30 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு

ஈரோடு, மே 23: பாதாள சாக்கடையில் சேரும் கழிவுநீரை சுத்திகரிக்க பீளமேடு பகுதியில் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தினமும் 30 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகராட்சி சார்பில் வீடு, வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாக்கடையில் கலக்காமல் நேரடியாக பாதாள சாக்கடை மூலமாக அந்த கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யும் வகையில் பாதாள சாக்கடை திட்டம் கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

Advertising
Advertising

இத்திட்டத்திற்காக, உள்ளாட்சி மற்றும் பொதுமக்கள் பங்களிப்பாக ரூ.61.89 கோடியும், ஜெர்மன் நிதி ஆதாரத்தில் இருந்து கடனாக ரூ.71.14 கோடியும், மானியமாக ரூ.62.77 கோடியும், உள்ளூர் திட்டக்குழு மானியமாக ரூ.3.60 கோடியும், கூடுதல் மானியமாக ரூ.9.82 கோடியும் என ரூ.209.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு துவங்கப்பட்டது. 5 பகுதிகளாக பிரித்து பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகிறது. தற்போது பாதாள சாக்கடை திட்ட குழாய்களில் 7 ஆயிரம் வீட்டு இணைப்பு கழிவுநீர் குழாய்கள் இணைக்கப்பட்டுள்ளது.

பாதாள சாக்கடையில் சேரும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யும் வகையில் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பீளமேட்டில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 18 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் தினமும்  30 லட்சம் லிட்டர் வீதம் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. இவை நல்ல நீராக மாற்றப்பட்டு பெரும்பள்ளம் ஓடை வழியாக காவிரி ஆற்றில் கலந்து விடப்படுகிறது. இவ்வாறு சுத்திகரிக்கப்படும் நீரில் உப்புத்தன்மை 1,000 முதல் 1,100 டிடிஎஸ் என்ற அளவிலேயே உள்ளதால் அதை விவசாயத்திற்கு பயன்படுத்தலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதாள சாக்கடை திட்டப்பணிகளில் குழாய் இணைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பாதாள சாக்கடை திட்டத்தில் சேரும் கழிவுநீரை அடுத்த 30 ஆண்டுகளில் மக்கள்தொகைக்கு ஏற்ப சேரும் கழிவுநீரை கருத்தில் கொண்டு 5 கோடி லிட்டர் தினமும் சுத்திகரிப்பு செய்யும் வகையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.ராட்சத குழாய்கள் மூலமாக வரும் கழிவுநீர், சுத்திகரிப்பு தொட்டிக்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் அங்கிருந்து மற்றொரு தொட்டிக்கு கொண்டு செல்லும்போது அதில் உள்ள மண்துகள்கள், பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்படுகிறது. அதற்கு பிறகு 2 தொட்டிகளில் கொண்டு செல்லப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது.

இவ்வாறு சுத்தம் செய்யப்படும் கழிவுநீரை குளோரினேசன் செய்யும் தொட்டிக்கு கொண்டு சென்று அங்கு சாக்கடை நீரை நல்ல நீராக மாற்றுகின்றனர். அங்கிருந்து நல்ல நீர் பெரும்பள்ளம் ஓடை வழியாக திறந்து விடப்பட்டு காவிரி ஆற்றில் கலக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பாதாள சாக்கடை கழிவுகள் சுத்தம் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறுகையில்,`தற்போது பாதாள சாக்கடை கால்வாயில் கழிவுநீர் குழாய்கள் இணைப்பு பணிகள் நடந்து வருகிறது.

இங்கு சேகரிக்கப்படும் கழிவுநீர் பீளமேடு பகுதியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு பின்னர் அந்த நீர் நல்ல நீராக காவிரி ஆற்றில் விடப்படுகிறது. இதனால் நீர்நிலைகள் மாசுபடுவது தடுக்கப்படுகிறது. தற்போது தினமும் 30 லட்சம் லிட்டர் சுத்தம் செய்து வருகிறோம். இந்த சுத்திகரிப்பு நிலையம் மூலமாக 5 கோடி லிட்டர் வரை சுத்திகரிப்பு செய்யும் வகையில் கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது.  இந்த திட்டம் முழுமையாக முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும்போது சாக்கடை கால்வாய் வழியாக கழிவுநீர் வெளியேறுவது முற்றிலும் தடுக்கப்படும்’ என்றார்.

Related Stories: