புற்றீசல் போல் முளைக்கும் போலி சாயப்பட்டறைகளால் வர்த்தக இழப்பு

திருப்பூர், மே 23: புற்றீசல் போல் முளைக்கும் போலி சாயப்பட்டறைகளால், வர்த்தக இழப்பு ஏற்படுவதாக, திருப்பூர் சாயப்பட்டறை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். திருப்பூரில் கடந்த 2011ம் ஆண்டுக்கு முன் 729 சாய, சலவைப்பட்டறைகள் இயங்கி வந்தன. தற்போது சுமார் 379 சாயப்பட்டறைகள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இந்த சாயப்பட்டறைகள் பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் உறுப்பினராகி உள்ளன. 379 சாயப்பட்டறைகள் இயங்கினாலும், வெளியிடங்களுக்கு சென்று சாயமேற்றும் பணிகளை பல நிறுவனங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

இதுமட்டுமின்றி திருப்பூரில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் சிறிய அளவிலான சாயப்பட்டறைகளை அமைத்து சாயமேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு முறைகேடாக இயங்கும் சாயப்பட்டறைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. பூஜ்ய சதவீத முறையில் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யும் தொழில் நுட்பத்தை அமைத்துக்கொண்டு செயல்படத்தொடங்கினால், உற்பத்தி செலவு, சாயமேற்றும் செலவு 40 முதல் 60 சதவீதம் அதிகம் ஆகிறது என்பதால், வெளியிடங்களுக்கு சென்று முறைகேடான வகையில் குறைந்த செலவில் சாயமேற்றிக்கொள்ளும் பழக்கம் திருப்பூரில் தொடர்ந்து வருகிறது.

இதனால் நேர்மையாக பூஜ்ய சதவீத சாய கழிவுநீர் சுத்திகரிப்பு பணிகளை செய்து வரும் சாயப்பட்டறை உரிமையாளர்களுக்கு வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகளோ, குடியிருப்பு பகுதிகளில் ெதாடர்ந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்காமல், புகார் வந்தால் மட்டுமே சம்பவ இடத்திற்கு சென்று நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதுபோன்ற போலி சாயப்பட்டறைகளை கட்டுப்படுத்த, அடிக்கடி குடியிருப்பு பகுதிகளில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாயப்பட்டறை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: