மருத்துவ குணங்கள் அதிகம்

இச்செடியில் காய்க்கும் விதையிலும், கிழங்கிலும் புற்றுநோய் பரவாமல் தடுக்கக்கூடிய கால்சிசின், குலோரியோசின் மருத்துவ பொருட்கள் அதிகளவில் உள்ளன. கண்வலி விதையில் இருந்து நச்சுத்தன்மையை நீங்கி மருந்தாக தயாரித்து ஹீமோதெரபி மூலம் புற்றுநோய் பரவாமல் தடுக்க மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படுவதாகவும், இதயநோய், தண்டுவடம் தொடர்பான நோய்களுக்கு மருந்துகள் தயாரிக்க பயன்படுவதாகவும் கூறப்படுகிறது.

சித்தமருத்துவத்தில் கண்வலி வேர், கிழங்கு மற்றும் விதைகளில் இருந்து வெளிப்பூச்சு மருந்துகள் தயாரிக்கப்படுகிறது. கண்வலியில் மருத்துவ குணம் இருப்பதை அறிந்த வெளிநாட்டு நிறுவனங்கள் சில விவசாயிகளிடம் இதன் விதையை அதிக விலை கொடுத்து வாங்கினர். அதன்பிறகே தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் கண்வலி பயிரிடுவதில் விவசாயிகள் அதிக அக்கறை காட்ட துவங்கினர். தற்போது சுமார் 600 ஏக்கரில் கண்வலி கிழங்கு பயிரிடப்படுவதாக தெரிகிறது.

பயிரிடும் முறை

கண்வலி பயிரிட செம்மண் பூமியும், குறைந்தளவு மழையும் உள்ள சூழல் தேவையாக உள்ளது. ஆந்திர மாநிலத்தில் இருந்து கிலோ ரூ.500 முதல் ரூ.600 வரை கொடுத்து கண்வலி கிழங்கை வாங்கி வரும் விவசாயிகள் அதனை கீற்று கொட்டகையில் வைத்து 6 மாத காலம் பராமரிக்கின்றனர். கிழங்கு முளைப்புதன்மையை அடைந்தவுடன் தங்களது நிலத்தில் பதிக்க துவங்குகின்றனர். முன்னதாக நிலத்தை உழுது கிழங்குகள் வளர தேவையான உரங்களை இட்டு, கண்வலி செடி படரும் வகையில் கம்பி, சிறுசிறு குச்சிகளை பயன்படுத்தி பந்தல் போன்ற அமைப்பை ஏற்படுத்தி வைக்கின்றனர். 1 ஏக்கரில் கண்வலி பயிரிட சுமார் 700 கிலோ கிழங்கு தேவைப்படுகிறது.

 சுமார் ரூ.5 லட்சம் வரை செலவு செய்வதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். நெல், கரும்பு போன்ற பயிர்கள் மழையை நம்பி மட்டுமே பயிரிடப்படும் நிலையில் கண்வலி செடி அதிகம் மழை பெய்தாலும் சேதமாகும், அதிக வெயில் தாக்கினாலும் கருகிவிடுமாம். மேலும், சொட்டுநீர் பாசனத்தை அமைத்து குறைந்த அளவு நீர் பாய்ச்சினாலே போதுமானதாக இருக்குமென விவசாயிகள் கூறுகின்றனர்.

இதுகுறித்து பூலாம்பட்டியை சேர்ந்த விவசாயி கருப்புச்சாமி கூறியதாவது,

கண்வலி கிழங்கை நிலத்தில் நட்டத்தில் இருந்து 5 மாதத்தில் பூ பூத்து காய்க்க துவங்கி விடுகிறது. மருந்து தயாரிக்கும் தனியார் கம்பெனிகள் எங்கள் பகுதிக்கே வந்து விதையின் தரத்திற்கேற்ப விலை கொடுத்து விதைகளை வாங்கி சென்றபோது 1 கிலோவிற்கு ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரத்து 500 வரை விலை கிடைத்தது. இதனால் அதிக தொகை லாபமாக கிடைத்தது.

கண்வலி உற்பத்தியில் 90% அளவிற்கு ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டியில் இருந்தே உற்பத்தி செய்யப்படுகிறது. இத்தாலி போன்ற வெளிநாடுகளுக்கு கண்வலி விதைகள் அதிகளவில் ஏற்றுமதி செய்யடுகிறது. சமீபகாலமாக தனியார் நிறுவனங்கள் உள்ளூர் இடைத்தரகர்களுடன் இணைந்து தங்களுக்குள் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி கொண்டு கண்வலி விதையை குறைந்த விலையை கொடுத்து வாங்கி வருகின்றனர்.

கடந்தாண்டு கண்வலி பயிரிட்ட எங்களை போன்ற விவசாயிகளிடம் ரூ.2 ஆயிரம் வரை மட்டுமே இடைத்தரகர்கள் பெற்று தந்தனர். இதனால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை. நெல், கரும்பு, தென்னை போன்ற பயிர்களுக்கு மாற்று பயிராக பயிரிட்டு அதிக லாபம் ஈட்டக்கூடிய கண்வலி விவசாயத்தை அரசு முறைப்படுத்த வேண்டும். நெல், கரும்புக்கு அரசு உரிய விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்வதைப்போல், கண்வலிக்கும் உரிய விலை நிர்ணயம் செய்து இடைத்தரகர் பிடிகளில் இருந்து விவசாயிகளை அரசு பாதுகாக்க முன்வர வேண்டும்.

 கண்வலியை அரசு அங்கீகரிக்கப்பட்ட விவசாய தொழிலாக அரசு அறிவிக்க வேண்டும். ஒட்டன்சத்திரம் பகுதியில் கண்வலி கொள்முதல் நிலையத்தை அமைக்க வேண்டும். மேலும், தமிழகத்தின் மாநில மலரான செங்காந்தளை அழிவின் விளிம்பில் இருந்து மீட்க வேண்டும். கண்வலியின் மருத்துவ பயன்களை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அரசு அலுவலகங்கள், பூங்காக்கள், பள்ளிகளில் நட்டு பராமரிக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: