ஆக்கிரமிப்பின் பிடியில் பழநி பஸ்ஸ்டாண்ட் நடைமேடை

பழநி, மே 23: பழநி பஸ்ஸ்டாண்ட் நடைமேடை ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி இருப்பதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். அறுடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக பழநி நகருக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் பழநி பஸ்நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் விற்பனை செய்வதற்காக நடைபாதைகளை ஆக்கிரமித்து ஏராளமான பழக்கடைகள், திண்பண்ட கடைகள் போடப்பட்டுள்ளன. நடைமேடைகளில் கடைகள் அமைத்திருப்பதால் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் வெயிலில் காய வேண்டி உள்ளது. நடைமேடை அருகே நிற்கும் பயணிகளையும் ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் விரட்டி அடித்து விடுகின்றனர்.

வெளியூர்க்காரர்கள் என்பதால் பக்தர்களும் வேறு வழியின்றி பஸ்சிற்காக வெயிலிலேயே காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பஸ்நிலையத்தின் எஞ்சிய பகுதிகளை நரிக்குறவர்கள் ஆக்கிரமித்து கடை விரித்துள்ளனர். இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். எனவே, நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து பஸ்ஸ்டாண்ட் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டுமென பக்தர்களும், பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: