வரத்து குறைவால் எகிறியது எலுமிச்சை

திண்டுக்கல், மே 23: திண்டுக்கல் மார்க்கெட்டில் வரத்து குறைவால் எலுமிச்சை விலை கிலோ தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம், ரெட்டியார்சத்திரம், நத்தம், கொடைக்கானல், சிறுமலையில் சுமார் 800 எக்டேரில் எலுமிச்சை சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதிகளில் இருந்து வாரம் ஒரு முறை டன் கணக்கில் எலுமிச்சை விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு தினமும் ஒரு டன் எலுமிச்சை வரத்து வரும். சீசன் காலத்தில் ஒரு கிலோ எலுமிச்சை ரூ.25 முதல் ரூ.40க்கும், ஒரு எலுமிச்சை பழம் ரூ.3க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது எலுமிச்சை சீசன் இல்லாததால் வரத்து குறைந்து விலை தினமும் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் கிலோ ரூ.80க்கு விற்ற எலுமிச்சை கடந்த வாரம் வரத்து குறைவால் ரூ.100க்கு விற்பனையானது.

எண்ணிக்கை கணக்கில் ஒரு பெரிய பழம் ரூ.6க்கும், சிறிய பழம் ரூ.4க்கும் விற்பனை செய்யப்பட்டது. உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் வரத்தும் குறைந்ததால் நேற்று ஒரு கிலோ எலுமிச்சை ரூ.120 வரை விற்றது. பெரிய பழம் ரூ.10க்கும், சிறிய பழம் ரூ.6க்கும் விற்றது.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, ‘திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மழை இல்லை.

இதனால் எலுமிச்சம் செடியில் போதிய விளைச்சல் இல்லை. எலுமிச்சைக்கு பொதுவாக பூச்சி மருந்து தெளிக்க மாட்டோம்.

 இந்தாண்டு எப்போதும் இல்லாத அளவிற்கு பூச்சிகள் தாக்குதலும் அதிகமாக இருந்தது. இதனால் விளைச்சல் இல்லாமல் போனது. இயற்கை மழை இல்லாததே பூச்சிகள் தாக்குதல் அதிகரிக்க காரணம். எலுமிச்சை விலை அதிகரித்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. மழை பெய்தால் மீண்டும் எலுமிச்சை வரத்து அதிகரிக்கும்’ என்றனர்.

Related Stories: